RCB Owner Sale: ஐபிஎல் நடப்பு சாம்பியனாக உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்க, அதானி மற்றும் JSW குழுமங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

விற்பனைக்கு வந்த ஆர்சிபி:

ஐபிஎல் போட்டியில் அதிகப்படியான ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி திகழ்கிறது. 18 ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு கோப்பையையும் வென்று அசத்தியது. இந்நிலையில் தான்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை அதன் தாய் நிறுவனமான டியாஜியோ அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வைத்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள், அதாவது மார்ச் 31, 2026க்குள் விற்பனையை முடிக்க டியாஜியோ இலக்கு வைத்துள்ளது.

Continues below advertisement

ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்?

விஜய் மல்லையாவிடம் இருந்து ஆர்சிபி அணியை வாங்கிய பிறகு, வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற போதிலும், டியாஜியோ தனது எதிர்கால முதலீடுகளை விளையாட்டு பிரிவில் இருந்து மாற்றி, தனது போர்ட்ஃபோலியோவை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு விளையாட்டு அணிகளின் நிர்வாகத்தில் பங்கேற்காமல், முக்கிய வணிகத்தில் கவனம் செலுத்த அந்த நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

RCB கோப்பையை வென்ற மறுநாள் ஏற்பட்ட கூட்ட நெரிசல், நிறுவனத்தின் இந்த முடிவுக்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது. அணிக்கான அதிகப்படியான மதிப்பு மற்றும் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விற்பனைக்கு இதுவே சரியான தருணம் என்று டியாஜியோ தீர்மானித்ததாகத் தெரிகிறது.

புதிய உரிமையாளர்கள் யார்? அதானி Vs JSW

வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆர்சிபி அணியை வாங்குவதற்கு முன்னணி கார்ப்ரேட் குழுமங்கள் மற்றும் முதலீட்டு ஜாம்பவான்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி,

  • ரிலையன்ஸ் (மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்கள் அல்ல) ஆதரவுடன் இயங்கும் விளையாட்டு முதலீட்டுப் பிரிவு
  • அதானி குழுமம்
  • ஜேஎஸ்டபிள்யூ குழுமம்
  • ஆர்பிஜி குழு
  • ரெட்பேர்ட் கேபிடல் (விளையாட்டு உரிமையில் உலகளாவிய இருப்பைக் கொண்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட தனியார் பங்கு நிறுவனம்) 
  • CVC கேபிடல் - முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளராக இருந்த குழு

பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குறிப்பிடப்பட்டவர்களில் யாரோ ஒருவர், விரைவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய உரிமையாளராக விரைவில் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. இதனால், ஆடவர் மற்றும் மகளிர் ஆர்சிபி அணிகளின் எதிர்கால திட்டங்கள் மொத்தமாக மாறக்கூடும் என கருதப்படுகிறது.

விராட் கோலியின் நிலை என்ன?

ஆர்சிபி விற்பனைக்கு வந்துள்ளதை தொடர்ந்து, 2008ம் ஆண்டு முதல் அணியின் அடையாளமாக உள்ள கோலிக்கு என்ன நடக்கும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பல வீரர்கள் அணி மாறியபோதும் கூட ஆர்சிபிக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். ஓய்வு பெற்ற பிறகுதான் அணியை விட்டு வெளியேறுவேன் என்று இந்திய நட்சத்திர வீரர் பலமுறை சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வீரராக கோலியின் ஒப்பந்தம் டியாஜியோவுடன் அல்ல, அணி உரிமையாளருடன் மட்டுமே உள்ளது. அதாவது உரிமையில் மாற்றம் அணியில் அவரது இடத்தைப் பாதிக்கக்கூடாது. இருப்பினும், எந்தவொரு புதிய உரிமையாளர் குழுவும் அணிக்கு வேறுபட்ட நிர்வாகத்தையும் திசையையும் கொண்டு வரக்கூடும், அது கோலியுடன் ஒத்துப்போகலாம் அல்லது ஒத்துப்போகாமலும் போகலாம். இதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.