ஐபிஎல் கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத அணியாக இருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ஆர்சிபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அணி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அணியாகும். ஐபிஎல் தொடரிலே சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய 3 அணிகள்தான் அளவுக்கு அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளனர். 

Continues below advertisement


ஆர்சிபி எனும் சாம்ராஜ்யம்:


நடப்பாண்டிற்கான ஐபிஎல் பட்டத்தை முதன்முறையாக ஆர்சிபி அணி கைப்பற்றிய நிலையில், அந்த அணியின் ரசிகர்ளுக்கு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணியை விற்க அந்த அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2008ம் ஆண்டு விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட இந்த அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது. 




இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்ப்ரிட்ஸ் ஆர்சிபி-யின் நிர்வாகத்தை கவனித்து வந்தது. கடந்த 17 ஆண்டுகளாக எந்த ஐபிஎல் பட்டத்தையும் வெல்லாமல் இருந்தாலும் ஆர்சிபி-யின் மதிப்பும், வியாபாரமும் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை, மும்பை அணிகளுக்கு நிகராக நடைபெற்று வந்தது. அதுவும் இந்த முறை பட்டத்தை கைப்பற்றவும் ஆர்சிபி மீதான பட்டம் மேலும் அதிகரித்துள்ளது. 


விற்பனைக்கு வரும் ஆர்சிபி:


இந்த சூழலில், ஆர்சிபி அணியை விற்பனை செய்ய டியாஜியோ பிஎல்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பாஜக அரசு மது மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பதால், தங்களது வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்று ஆர்சிபி உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே, ஆர்சிபி-யை விற்பனை செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




ஆர்சிபி அணி வெற்றி பெற்ற அடுத்த நாளே அந்த அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த ரசிகர்களை சோகத்தில் இருந்து அவர்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில், தற்போது ஆர்சிபி விற்பனையாக உள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர்சிபி அணியை மிகப்பெரிய கோடீஸ்வரர் யாராவது வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


போட்டா போட்டி:


விராட் கோலி எனும் கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார் ஆடுவதாலும், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பதாலும் ஆர்சிபி-யை வாங்க பலரும் போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 


இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வமான  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. முதன்முறையாக ஐபிஎல் பட்டத்தை தற்போதுதான் ஆர்சிபி அணி வென்றுள்ள நிலையில், புதியதாக வரும் உரிமையாளரின் நடவடிக்கைகள் அணியின் வளர்ச்சியை பாதிக்குமா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.