ஐபிஎல்லில் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வரும் பெங்களூரு அணியால் இதுவரை ஒருமுறையை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இருப்பினும், ஆண்டுதோறும் ஐபிஎல்லில் பெங்களூரு அணி களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்கள் அதிகளவில் அன்பையே கொடுக்கின்றனர். 


இந்தநிலையில், ஐபிஎல் 2024ன் 41வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஐபிஎல் வரலாற்றில் இது பெங்களூரு அணியின் 250வது போட்டியாகும். இந்த போட்டியின் மூலம், பெங்களூரு ஐபிஎல் 2024ல் தனது இரண்டாவது வெற்றியை பெற முயற்சிக்கும். 


இதையடுத்து, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது 250வது போட்டியில் வெற்றியை பதிவு செய்யுமா இல்லையா என்பதை காண அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றன. 






இதுவரை பெங்களூரு அணியின் பயணம்: 



  • ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 249 போட்டிகளில் விளையாடி 117ல் வெற்றியும், 128 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 4 போட்டிகள் முடிவு இல்லை. பெங்களூரு அணியின் வெற்றி சதவீதம் 46.18 ஆகும்.

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. ஆனால், ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

  • 2009ல் டெக்கான் சார்ஜர்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்திலும், 2011ல் சென்னை சூப்பர் கிங்ஸிடம் 58 ரன்கள் வித்தியாசத்திலும், 2016ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 8 ரன்கள் வித்தியாசத்திலும் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தது.

  • இது தவிர, பெங்களூரு அணி 2010, 2015, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை நாக் அவுட் சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளது.

  • பெங்களூரு அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை ஆர்சிபி அணிக்காக 8 சதங்கள், 52 அரைசதங்களுடன் 7, 642 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சிறந்த ஸ்கோர் 113 ஆகும். கடந்த 2008ம் ஆண்டு முதல் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பெங்களூரு அணிக்காக அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 113 போட்டிகளில் 139 விக்கெட்களை எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் முகமது சிராஜ் 80 போட்டிகளில் 73 விக்கெட்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

  • 2013ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 263 ரன்கள் அடித்ததன் மூலம், இந்த சீசனில் ஆரம்பம் வரை ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வைத்திருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 மற்றும் 287 ரன்கள் இந்த சீசனில் இரண்டு முறை அடித்து முறியடித்தது.

  • 2017ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 49 ரன்களுக்குள் ஆல் அவுட்டான ஐபிஎல்லில் மிக குறைந்த ஸ்கோரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்றுவரை வைத்திருக்கிறது. 

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ராகுல் டிராவிட், மார்க் பவுச்சர், கெவின் பீட்டர்சன், கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ், தில்ஷன், அனில் கும்ப்ளே, ஜாக் காலிஸ், ராஸ் டெய்லர், பிரவீன் குமார், கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், ஷேன் வாட்சன், டெயில் ஸ்டெயின், ஜாகீர் கான், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்களும் விளையாடியுள்ளனர்.