Samson Jadeja CSK: சஞ்சு சாம்சனுக்கு நிகராக ஆல்-ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு வழங்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம்.
சிஎஸ்கே - ராஜஸ்தான் டீலிங்:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான, வீரர்களை பரிமாறிக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். வெளியாகியுள்ள தகவல்களின்படி, சஞ்சு சாம்சனிற்கு நிகராக ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் சாம் கரனை, ராஜஸ்தான் அணிக்கு வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் நடைமுறை சிக்கலில் சிக்கியுள்ளது. BCCI முறையான செயல்முறையை முடிக்கும் வரை, வீரர்களுக்கான இந்த ட்ரேடிங்கை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படுத்த முடியாது.
இரு அணிகளுக்கு இடையேயான இந்த முன்மொழிவானது, ஐபிஎல் வீரர்களுக்கான விதிமுறைகளின் கீழ் ஆர்வத்தை வெளிப்படுத்தும் (EOI) நிலைக்கு வந்துவிட்டது. அதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் நிலுவையில் இருந்தாலும், கட்டாய 48 மணி நேர செயலாக்கத்திற்கான அவகாசம் தொடங்கியுள்ளது. இந்த அவகாசம் முடிந்த பிறகு, சாம்சன் சென்னை அணிக்காக விளையாடுவாரா? இல்லையா? என்பது உறுதி செய்யப்பட உள்ளது.
இறுதிகட்டத்தில் ஒப்பந்தம்:
க்ரிக்பஸ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பரிமாற்றம் தொடர்பாக ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் மற்றும் சாம்கரன் ஆகியோரிடம் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள் பேசி, ஒப்பந்தத்தில் கையெழுத்தையும் பெற்றுவிட்டனவாம். தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் இறுதி கட்டத்தை அடைய சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. இரு அணிகளுக்கு இடையே வீரர்களை பரிமாறிக்கொள்வதற்கான விருப்பம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், திங்கட்கிழமை மாலை வரை இது பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என கூறப்படுகிறது.
ஐபிஎல் விதிகள் சொல்வது என்ன?
ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கான ட்ரேடிங் விதிகளின் கீழ், வர்த்தகத்தைத் தொடங்க ஆர்வமுள்ள ஒரு அணியின் உரிமையாளர் பிசிசிஐக்கு ஒரு தனது முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து தொடர்புடைய அணியை பிசிசிஐ நிர்வாகம் தொடர்பு கொள்கிறது, அதற்கு பதிலளிக்க 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்படும். வீரரின் தற்போதைய உரிமையாளர் பேச ஒப்புக்கொண்டால், வீரரின் ஒப்புதல் கடிதம் பெறப்படுகிறது. அதன் பிறகு பேச்சுவார்த்தைகள் - ஒப்பந்த மதிப்பில் ஏதேனும் அதிகரிப்பு அல்லது குறைவு உட்பட - ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் அனுமதிக்கப்படும். இந்த சங்கிலி முடிந்து அங்கீகரிக்கப்பட்ட பின்னரே வீரரின் பரிமாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.
சாம் கரன் விவகாரத்தில் சிக்கல்:
சாம் கரன் ஒரு வெளிநாட்டு வீரர் என்பதால் அவரை அணிகளுக்கு இடையே பரிமாற்றிக் கொள்ள கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அணிகளை மாற்றுவதை நிர்வகிக்கும் ஐபிஎல் விதிகளின்படி, இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் தேவைப்படலாம். ஜடேஜா மற்றும் சாம்சன் இருவரும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக முறையே ரூ.18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டனர், அதே நேரத்தில் கடந்த மெகா ஏலத்தில் கரன் ரூ.2.4 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார். பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் சென்னை அணியிலிருந்து டெவால்ட் ப்ராவிஸையும் பின்னர் மதீஷா பதிரானாவையும் கேட்டது, ஆனால் அந்த பெயர்கள் நிராகரிக்கப்பட்டவுடன், ஜடேஜாவுடன் கரன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.