ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருவது போல சென்னை அணியும் தயாராகி வருகிறது. தொலை நோக்குப் பார்வையுடன் அணிக்குள் ஏராளமான வீரர்களை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் போட்ட கண்டிஷன்:
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பதிலாக சாம்சனை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சென்னை அணிக்கு சாம்சனை அளிக்க வேண்டும் என்றால், தங்களுக்கு சிஎஸ்கே-வின் நட்சத்திர வீரர் ஜடேஜாவை அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
ப்ரெவிஸை கேட்கும் ராஜஸ்தான்:
சென்னை அணிக்கு தங்களது கேப்டனை வழங்க அவருக்கு நிகரான வீரரை வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் அணி நிபந்தனைக்கு சென்னை அணி முதலில் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது ராஜஸ்தான் அணி ஜடேஜா மட்டுமின்றி சாம்சன் போன்ற அதிரடி பேட்ஸ்மேனையும் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. அந்த பேட்ஸ்மேன் ப்ரெவிஸ் ஆவார்.
ஜடேஜா, ப்ரெவிஸ் இருவரையும் சாம்சனுக்கு பதில் வழங்க வேண்டும் என்ற ராஜஸ்தான் ராயல்ஸ் நிபந்தனையால் சென்னை அணி தயக்கம் காட்டி வருகிறது. 36 வயதான ஜடேஜாவை வழங்க சென்னை அணி தயக்கம் காட்டவில்லை. ஆனால், வெறும் 22 வயதே ஆன ப்ரெவிஸை அளிக்கத் தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனென்றால், ப்ரெவிஸ் கடந்த சீசனில் சென்னை அணிக்கு மீண்டும் நம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்தவர். அதிரடி பேட்ஸ்மேனான அவர் 16 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 456 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்துள்ளார்.
சோகத்தில் ரசிகர்கள்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விதித்துள்ள நிபந்தனைக்கு சென்னை அணி ஒப்புக்கொள்ளுமா? அல்லது ஜடேஜாவை மட்டும் விடுவிக்குமா? அல்லது ஜடேஜா, ப்ரெவிஸ் இருவரும் சிஎஸ்கே-விலே தொடர்வார்களா? என்பது விரைவில் தெரிய வரும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சாம்சன் சென்னை அணிக்கு வருவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஜடேஜா மற்றும் ப்ரெவிஸை ராஜஸ்தான் அணி கேட்பது சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேதனையை உண்டாக்கியுள்ளது.
ஜடேஜா சென்னை அணிக்காக ஏராளமான போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். ப்ரெவிஸ் சென்னை அணியின் எதிர்கால சொத்தாக உருவெடுத்துள்ளார். இவர்களை இழப்பது அணிக்கு மிகப்பெரிய பலவீனத்தை உண்டாக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.