Rashid Khan Catch: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் வீரர் ரஷீத்கான் டைவ் அடித்து பிடித்த கேட்ச் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மிரட்டல் கேட்ச்:


ஐ.பி.எல். தொடரில் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டிகளின் முடிவுகள் புள்ளிப்பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இவையெல்லாம் ஒரு புறமிருக்க, போட்டிகளின் போது வீரர்கள் வெற்றிக்காக போராடுவது அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்துவதோடு ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நடைபெற்றுள்ளது. 


குஜராத் அணி நிர்ணயம் செய்த 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிவந்த லக்னோ அணியின் தொடக்க வீரர் 30 பந்தில் 48 ரன்கள் எடுத்த நிலையில், குஜராத் அணியின் பந்து வீச்சாளர் மோகித் சர்மா வீசிய  பந்தை லெக் சைடில் தூக்கி அடிக்க அதனை பவுண்டரி எல்லையில் நின்று கொண்டு இருந்த ரஷீத்கான் வேகமாக ஓடி வந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் டைவ் அடித்து பிடிக்க, அதிரடியாக ஆடி வந்த கேயல் மேயர்ஸ் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது லக்னோ அணி 8.2 ஓவர்களில் 88 ரன்கள் எடுத்து இருந்தது.






பாராட்டிய விராட் கோலி 


தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் ரஷீத்கானை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் “ நான் இதுவரை இப்படியான ஒரு கேட்சை பார்த்ததில்லை. மிகச்சிறப்பு என பதிவிட்டு ரஷீத்கானை டேக் செய்துள்ளார்.


மேயர்ஸ் விக்கெட்டுக்குப் பிறகும் டி-காக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், முதல் 10 ஓவர்களிலேயே லக்னோ அணி 100 ரன்களை கடந்தது. நடப்பு தொடரில் முதன்முறையாக களமிறங்கிய டி-காக், 31 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனிடையே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.


சறுக்கிய லக்னோ:


அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்ததை தொடர்ந்து லக்னோ அணியின் ரன்வேகம் கணிசமாக குறைந்தது. பவுண்டரி மற்றும் சிக்சர்களை விட்டுக்கொடுக்காமல் குஜராத் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தி லக்னோவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ரன் சேர்க்க முடியாமல் திணறிய  ஸ்டோய்னிஷ் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டி-காக் 70 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து பூரானும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பதோனி 21 ரன்களிலும், க்ருணால் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.


குஜராத் வெற்றி:


இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் நடப்பு தொடரில் மட்டும் லக்னோ அணியை குஜராத் இரண்டு முறை வீழ்த்தியுள்ளது.