இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் உள்ள  லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல் சரியானதாக இருந்தால், ஐபிஎல் 2024க்கு முன்னதாக லக்னோ அணியின் வழிகாட்டியாக டிராவிட் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 


ஐ.பி.எல்.க்கு தாவும் டிராவிட்?


ஆனால் மேற்குறிப்பிட்டது நடக்கவேண்டும் என்றால் டிராவிட் மற்றும் பிசிசிஐ இடையே நடக்கவுள்ள பேச்சு வார்த்தையைப் பொறுத்துதான் நடக்கும் எனலாம்.  இந்திய கிரிக்கெட் அணியின்  தலைமை பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் ஒப்பந்தக்காலம் முடியவடையவுள்ளது.  நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்த ஆண்டு உலகக் கோப்பை வரை இரண்டு வருட ஒப்பந்தத்தம் முடிவடைவதால், பிசிசிஐ தரப்பில் டிராவிட்டை தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளராகவே நீடிக்கச் சொன்னால் லக்னோ அணி தனக்கு வேறு ஆலோசகரைத் தேடவேண்டியதுதான்.


இதற்கு முன்னர் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, அன்றைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் தற்போதைய செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.


குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்பும் டிராவிட்


டிராவிட்டின் பயிற்சியின் கீழ், இந்தியா ஐசிசி கோப்பையை வெல்லவில்லை, ஆனால் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்திய போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சென்றது.  தற்போது மூன்று வடிவங்களிலும் நம்பர்-1 அணியாக உள்ளது. இந்திய அணி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்றனர், ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியைத் தழுவினர்.


ஆங்கில ஊடகங்களில், பிசிசிஐ டிராவிட்டுடன் அவரது எதிர்கால முடிவுகள் பற்றி அறிய ஒரு சந்திப்பை நடத்த வாய்ப்புள்ளது, ஆனால் டிராவிட் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகின்றது.  டிராவிட் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறார், இதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடித்தால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது. 


இதற்காகவே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பினை ஒப்பந்தத்தின்படி முடித்துவிட்டு  ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியில் இணைந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.  இதன் மூலம் கிரிக்கெட்டில் தொடர்ந்து நீடிப்பதுடன் தனது குடும்பத்துடன் அதிகமான நேரத்தினை செலவிட முடியும் என்பதால் டிராவிட் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.




 


லக்னோ ஆர்வம்:


லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர் தற்போது தான் கேப்டனாக விளையாடி இரண்டு கோப்பைகளை வென்ற கொல்கத்தா அணிக்கே ஆலோசகராக திரும்பிவிட்டதால், லக்னோ அணியின் ஆலோசகர் இடம் காலியாக உள்ளது. கம்பீர் கடந்த இரண்டு ஆண்டுகளாக லக்னோ அணியின் வழிகாட்டியாக இருந்தார் மற்றும் அணியை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். 


லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டி ஃப்ளவருடன் ஏற்கனவே அணியில் இருந்து விலகிவிட்டார். ஜஸ்டின் லாங்கர் அடுத்த சீசனில் இருந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார். அதேபோல் டிராவிட் முடிவு மட்டும் லக்னோ அணிக்கு சாதகமாக நடந்தால் லக்னோ அணியில் அவர் இணைவார். 


ஒரு வீரராகவும், கேப்டனாகவும் பல ஆண்டுகளாக அவர் பிரதிநிதித்துவப்படுத்திய அணியான ராஜஸ்தான் ராயல்ஸுடனும் டிராவிட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.  இவர் ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.


ஆனால் தற்போதைய நிலவரப்படி, டிராவிட்டை வழிகாட்டியாக நியமிப்பதில் ராஜஸ்தான அணியை விடவும் லக்னோ அணியே முன்னணியில் உள்ளது.