இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். அந்தவகையில் ஒரு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இதுவரையில் எப்படி செயல்பட்டு இருக்கிறார்? அவர் தலைமையில் விளையாடிய அணி கோப்பைகளை கைப்பற்றியதா இல்லையை? என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
ராகுல் டிராவிட் எனும் தி கிரேட் வால்
இந்திய அணியின் 'தி கிரேட் வால்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் களத்தில் இருந்தாலே, அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம் என்று எதிரணி பந்துவீச்சாளர்கள் புலம்பிய காலம் இருந்தது. இந்திய அணியில் ஒரு வீரராக தனது முழு பங்களிப்பைச் செய்த ராகுல் டிராவிட், இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை.
ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் 2007-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது.
இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் பேட்டிங் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவரைச் சிறிது சிறிதாக ஓரம் கட்டிய பி.சி.சி.ஐ, ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி 2009-ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து நீக்கியது. அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு தான் மீண்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் அவர் விளையாடிய கடைசி போட்டியாக அமைந்தது இங்கிலாந்தில் உள்ள கார்டிப் நகரில் நடைபெற்ற ஒரு நாள் போட்டி.
அந்த போட்டியில் டிராவிட் மொத்தம் 79 பந்துகள் களத்தில் நின்று 69 ரன்கள் விளாசி இருந்தார். கேப்டனாக ராகுல் டிராவிட் சொதப்பி இருந்தாலும் வீரராக அவர் எப்போதும் மிகச்சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். தான் விளையாடிய 164 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களையும் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 35 சதங்கள்,ஒரு நாள் போட்டிகளில் 12 சதங்களையும் விளாசிய டிராவிட் சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும் உள் நாட்டு போட்டிகளில் இருந்தும் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
பயிற்சியாளராக அவதாரம் எடுத்த டிராவிட்:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் பயிற்சியாளராக டிராவிட் அவதாரம் எடுத்தது கடந்த 2015 ஆம் ஆண்டு தான். 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராகவும், இந்திய எ அணியின் பயிற்சியாளராகவும் 2015 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை டிராவிட் செயல்பட்டார். இவரது தலைமையில் விளையாடிய 19 வயதிற்குட்பட்டோர் அணி கடந்த 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்தது. அதே சூட்டோடு 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 19 வயதிற்குட்பட்ட இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் ப்ரித்வி ஷா கேப்டனாக செயல்பட்டார்.
ராஜஸ்தான் அணியின் வழிகாட்டி:
ராஜஸ்தான் அணியின் வழிகாட்டியாக ஐபிஎல் தொடரில் ராகுல் டிராவிட் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். இவரது வழிகாட்டுதலின் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2015 ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தை பிடித்தது. இதனைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டார். பின்னர் 2019 இல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ஆனார்.
இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர்:
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். இவர் தலைமையில் கீழ் விளையாடிய இந்திய அணி 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இறுதிப் போட்டிவரை சென்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரிலும் இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி கோப்பையை வெல்ல தவறியது. அதேபோல் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையையும் இந்திய அணி இறுதிப் போட்டிவரை சென்ற இந்திய அணி தவறவிட்டது.
இப்படி முக்கிய ஐசிசி கோப்பைகளை இந்திய அணி தவறவிட்டாலும், 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. இந்த வெற்றியுடன் இந்திய தலைமைபபயிற்சியாளர் பதவிக்காலம் டிராவிட்டிற்கு முடிவடைந்தது. இச்சூழலில் தான் கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திய டிராவிட் ராஜஸ்தான் அணியையும் கோப்பையை வெல்ல வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.