அபுதாபியில் ராஜஸ்தான் அணியை டெல்லி வீழ்த்திய சற்று நேரத்தில், ஷார்ஜாவில் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் ஷார்ஜாவில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.


இதனால், பஞ்சாப் இன்னிங்சை கேப்டன் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் தொடங்கினார். 3வது ஓவர் நிதானமாக இருவரும் ரன்களை சேர்த்தனர். ஆனால், 4வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் வீசிய முதல் பந்திலே கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்ததும் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் களமிறங்கினார்.




அதேஓவரில், மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வாலையும் ஜேசன் ஹோல்டார் காலி செய்தார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்ததால் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கிறிஸ் கெயிலும், மார்க்ரமும் மிகவும் நிதானமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 57 ஆக இருந்தபோது ய கிறிஸ் கெயில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


அடுத்த களமிறங்கிய நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், சந்தீப் சர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த மார்க்ரம் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


இந்த நிலையில், பஞ்சாப் அணியில் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஹூடா ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஹர்பிரீத் பிராரும், நாதன் எல்லீசும் ஓரிரு ரன்களாக திரட்டினர். இதனால், இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு125 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சந்தீப் சர்மா, புவனேஷ்குமார், ரஷீத்கான், அப்துல் சமத் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.




இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷமி பந்துவீச்சில் டேவிட் வார்னர் வெளியேறினார். அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில், கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் அவுட்டாகியவுடன் கேப்டன் கனே வில்லியம்சன் களமிறங்கினார். ஆனால், முகமது ஷமியின் பந்தில் வில்லியம்சன் கிளின் போல்டாகினார். அவர் 1 ரன்களில் வெளியேறி ஹைதராபாத் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.


இதையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத்தின் நட்சத்திர வீரர் மணீஷ் பாண்டே ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் 13 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் போல்டாகினார். மறுமுனையில் தொடக்க வீரர் விருத்திமான் சஹா ஓரிரு ரன்களாக சேர்த்து வந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவும் ஓரிரு ரன்களாக திரட்டினார். ஹைதராபாத் அணி 12வது ஓவரில்தான் 50 ரன்களையே கடந்தனர். அணியின் ஸ்கோர் 56 ரன்களாக உயர்ந்தபோது கேதர் ஜாதவ் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ரவி பிஷ்னோய் வீசிய அதே ஓவரின் கடைசி பந்தில் அப்துல் சமத் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.


ஹைதராபாத் அணி 15 ஓவர்களில் வெறும் 75 ரன்களே எடுத்திருந்தனர். 30 பந்தில் ஹைதராபாத்தின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. விருத்திமான் சஹாவும், ஜேசன் ஹோல்டரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். நாதன் எல்லீஸ் வீசிய 16வது ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் மட்டும் ஜேசன் ஹோல்டர் இரண்டு இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டார்.




இதனால், பஞ்சாப்பின் வசம் இருந்த ஆட்டம் ஹைதராபாத்தின் பக்கம் திரும்பியது. இதனால், 24 பந்தில் 35 ரன்கள் தேவை என்ற எளிதான நிலைக்கு ஹைதராபாத் அணி வந்தது. 16வது ஓவரில் மட்டும் 16 ரன்களை ஹைதராபாத் அணி எட்டியது. ஆட்டம் ஹைதராபாத்தின் கட்டுக்குள் வந்தபோது தொடக்க வீரர் விருத்திமான் சஹா ரன் அவுட்டானார். இதனால், ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவர் நிலைத்து நின்று ஆடி 37 பந்தில் 31 ரன்களை சேர்த்தார்.


ஆட்டத்தின் 18வது ஓவரில் ஹோல்டர் 4வது சிக்ஸரை முகமது ஷமியின் பந்துவீச்சில் பறக்கவிட்டார். இதனால், பஞ்சாப் வீரர்களும், ரசிகர்களும் பதற்றம் அடைந்தனர். 12 பந்தில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி இருந்தது. ஹோல்டரை அவுட்டாக்கினால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பஞ்சாப் இருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் ரஷீத்கான் ஆட்டமிழந்தார்.




கடைசி ஓவரில் 6 பந்தில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஹோல்டர் தனது 5வது சிக்ஸரை பறக்கவிட்டார். இறுதியில் 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர். இறுதியில் ஒரு பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், இரண்டு ரன்கள் மட்டுமே ஹைதராபாத் வீரர்கள் எடுத்தனர். ஜேம்ஸ் ஹோல்டர் 29 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் குவித்தார்.


இதனால், பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி ஓவரை நாதன் எல்லீஸ் சிறப்பாக வீசியதால் பஞ்சாப் வெற்றி பெற்றது.