சனிக்கிழமையன்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு (MI) எதிரான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி அதன் சொந்த சாதனையையே மீண்டும் முறியடித்து மாற்றி எழுதியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் கடைசி ஆறு ஓவர்களில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது.


மும்பை - பஞ்சாப் போட்டி


மும்பை அணிக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றியைப் பெற்றது. மும்பை வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அபாரமாக பந்துவீசி அசர வைத்ததுடன், இரண்டு ஸ்டம்புகளையும் உடைத்து அதகளம் செய்தார். இதனால் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது.



கடைசி 6 ஓவர்கள் சாதனை


அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் அதிகபட்சமாக 55 ரன்கள் குவித்தார். குறிப்பாக 16வது ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 31 ரன்கள் கொடுத்தார். இந்த முதல் இன்னிங்சில் ஆரம்பத்தில் மெதுவாக ஆடிய பஞ்சாப் அணி 14 ஓவர்களுக்கு பின் மைலேஜ் ஏற்றியது. அப்போது பந்து வீசவந்த அனைவரையும் அடித்து துவம்சம் செய்தது பஞ்சாப் அணி. குறிப்பாக அர்ஜுன் டெண்டுல்கர் ஓவரை பதம் பார்த்தது. இன்னிங்ஸின் கடைசி ஆறு ஓவர்களில், அதாவது 15 முதல் 20வது ஓவரில், பஞ்சாப் கிங்ஸ் 109 ரன்கள் எடுத்தது. 


தொடர்புடைய செய்திகள்: Arshdeep Singh: ரெண்டே பால், ரூ.24 லட்சம் காலி..! ஸ்டம்புகளை உடைத்தெறிந்து அர்ஷ்தீப் சிங் மிரட்டல்


அர்ஜுன் டெண்டுல்கரை பதம் பார்த்த பஞ்சாப்


15வது ஓவரில் ஹிருத்திக் ஷோக்கீன் ஒரு சிக்ஸர் உட்பட 13 ரன்கள் கொடுத்தார். அடுத்த ஓவரை வீசிய அர்ஜுன் டெண்டுல்கரை விளாசினர் பஞ்சாப் அணியினர். முதல் பந்தே கரன் அர்ஜுனை நேராக ஒரு சிக்ஸர் அடிக்க, இரண்டாவது பந்து வைடு, அடுத்தது பவுண்டரி. மூன்றாவது பந்தில் கரன் ஒரு ரன் எடுக்க, ஹர்பிரீத் அடுத்த இரண்டு பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். அடுத்த பந்தை ஃபுல் டாசாக வீச, அது வயிற்றுக்கு மேல் சென்றதால், நோ பால் கொடுக்கப்பட அந்த பந்தும் அதற்கு அடுத்த பந்தும் பவுண்டரி சென்றது. இதனால் அந்த ஓவரில் மொத்தம் 31 ரன்கள் கசிந்தது. 



109 ரன்கள் குவித்து சாதனை


அடுத்த ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு பவுண்டரி, சிக்ஸர் உட்பட 13 ரன்கள் கொடுத்தார். அடுத்த ஓவரில் கேமரூன் கிரீன் மீது பஞ்சாப் அணி தனது ஈவிரக்கம் இல்லாத அதிரடியை தொடர்ந்தது. அவர் நான்கு சிக்ஸர்களுடன் 25 ரன்கள் கொடுத்தார். அடுத்த ஓவரில் ஆர்ச்சர் 10 ரன்கள் கொடுத்தார். கடைசி ஓவரில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 17 ரன்கள் கொடுத்தார். இதன் மூலம், ஒரு இன்னிங்ஸின் இறுதி ஆறு ஓவர்களில் அதிகபட்ச ரன்களை குவித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2016 இல் குஜராத் லயன்ஸுக்கு எதிராக ஆர்சிபி அணி 126 ரன்கள் குவித்திருந்தது. அதுமட்டுமின்றி பஞ்சாப் அணி கடைசி 6 ஓவர்களில் அடித்த அதிகபட்ச ரன்னாக இது அமைந்தது. இதற்கு முன்பு 2014 சீசனில் சென்னைக்கு எதிராக 92 ரன்கள் குவித்ததே அந்த அணியின் அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் 2020 இல் ஒரு இன்னிங்ஸ, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 104 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.