ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவித்துள்ளார். மேலும், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார். 


 






ஐபிஎல் போட்டித் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். அந்த அணியின் ஆல் ரவுண்டரான வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்ட், மும்பை அணி போட்டிகளில் வெல்வதற்கு மட்டும் இல்லாமல், கோப்பையை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று தனது ஓய்வினை அறிவித்துள்ளார். அதில், மும்பை அணியை விட்டு போக மனசே இல்லை, அணியில் வீரராக இல்லாவிட்டாலும், பேட்டிங் பயிற்சியாளராக தொடரவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 


ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான சூழ்நிலையை கொண்டிருந்தது. மும்பை அணி 14 போட்டிகளில் அதில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்ததால், பிளே-ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிய முதல் அணியானது. இதையடுத்து மும்பை அணியின் உரிமையாளர்களான ஆகாஷ் மற்றும் நீதா அம்பானி தங்கள் வீரர்களை ஆதரிப்பதில் பெயர் பெற்றிருந்தாலும் , இந்த முறை சிறு ஏலத்திற்கு முன்னபாக சில முக்கிய வீரர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 


அதன் அடிப்படையில், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் ,ஃபேபியன் ஆலன் மற்றும் இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் ஆகியோரை மும்பை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் கீரன் பொல்லார்டு தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் தான் மும்பை அணியை எதிர்த்து ஒருபோதும் விளையாட மாட்டேன். ஒரு முறை மும்பை எப்போதும் மும்பை. மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தொடரவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். 


கீரன் பொல்லார்ட்:


மும்பை அணிக்காக கீரன் பொல்லார்டின் பங்கு யாரலும் மறக்க முடியாத ஒன்று. மும்பை அணி 5 முறை கோப்பை வென்றபோது, அதற்கு முக்கிய பங்காக பொல்லார்ட் பெயர் இடம் பெற்று இருக்கும். கடந்த 2010 ம் ஆண்டு மும்பை அணியில் இணைந்த பொல்லார்ட் கிட்டதட்ட 12 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மும்பை அணிக்காக இதுவரை அவர் 3412 ரன்களும், 69 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் 2022க்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியால் கீரன் பொல்லார்டு ரூ. 6 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.