PBKS vs RR, IPL 2024: பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு முல்லன்பூரில் உள்ள மகாராஜா யதவிந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
பஞ்சாப் - ராஜஸ்தான் மோதல்:
பஞ்சஅப் மாநிலம் முல்லன்பூரில் உள்ள ம்காராஜா யதவிந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறது. ஆனால், கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் தோல்வியுற்றது. இதனால் இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் தயாராகி வருகிறது. அதேநேரம், பஞ்சாப் அணியோ இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இந்த அணியும் கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் தோல்வியையே சந்தித்தது. இதனால், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியை பொறுத்தவரையில் சஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் புதிய பேட்டிங் நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர். சாம் கரண் மற்றும் ஷிகர் தவான் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. பந்துவீச்சில் ரபாடா மற்றும் அர்ஷ்தீப் சிங் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகின்றனர். ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், பட்லர் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளன. ஆனால் ஜெய்ஷ்வால் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சில் போல்ட், சாஹல் மற்றும் அஷ்வின் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடி தருகின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 15 முறையும், பஞ்சாப் அணி 11 வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 124 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 112 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க முனைகிறது. டாஸ் வென்ற கேப்டன் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, பெரிய இலக்கை நிர்ணயிப்பது வெற்றிக்கு உதவும்.
உத்தேச அணி விவரங்கள்:
பஞ்சாப்: ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், சிக்கந்தர் ராசா, ஜிதேஷ் சர்மா, அசுதோஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்