17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.  இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி 35 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார். அதேபோல், டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளும் கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளும் முகேஷ்  மற்றும் இஷாந்த் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். 


அதன் பின்னர் 168 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு தொடக்கம் மட்டும் சிறப்பாக அமையவில்லை. அதிரடி ஆட்டக்காரர் வார்னர் 8 ரன்னில் தனது விக்கெடினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களத்திற்கு மெக்கர்க் வந்தார். அவருடன் இணைந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா இணைந்து பவுண்டரிகளை விளாசி வந்தார். 


இந்த கூட்டணி பவர்ப்ளேவில் ஆதிக்கம் செலுத்தியதால் லக்னோ அணி என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்தனர். குறிப்பாக தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய மெக்கர்க் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த ப்ரித்வி ஷா தனது விக்கெட்டினை 21 பந்தில் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 


அதன் பின்னர் கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கினார். இவர் மெக்கர்க் உடன் இணைந்து சிறப்பாக விளையாடியது மட்டும் இல்லாமல் லக்னோ அணி வீசிய சவாலான பந்துகளை பொறுப்புடனே கையாண்டனர். இதனால் லக்னோ அணியால் மேற்கொண்டு விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. இந்த கூட்டணி அதிரடியாக ரன்கள் குவித்து வந்த போது போட்டியின் 12வது ஓவரை ஸ்டாய்னஸ் வீசினார். அந்த ஓவரில் மெக்கர்க் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பினை ரவி பிஷ்னாய் வீணடிக்க, அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதிரடியாக விளையாடிய மெக்கர்க் 31 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். மறுமுனையில் இருந்த ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி அசத்தினார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.


போட்டியின் 15வது ஓவரில் மெக்கர்க்கும் 16வது ஓவரில் ரிஷப் பண்ட்டும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறியது டெல்லி அணி ரசிகர்களுக்கு கவலையைக் கொடுத்தாலும், டெல்லி அணியின் வெற்றியினை பாதிக்கவில்லை. அதன் பின்னர் களத்தில் இருந்த ஸ்டப்ஸ் மற்றும் ஹோப் மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.  இறுதியில் டெல்லி அணி 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.