Hardik Pandya: மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு மீண்டும் காயம் உறுதியானால், அவர் டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது கேள்விக்குறியாக மாறும்.


ஹர்திக் பாண்ட்யாவிற்கு காயம்?


நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி கேப்டனான் ஹர்திக் பாண்ட்யா, கடந்த 3 போட்டிகளில் ஒரு ஓவரை மட்டுமே வீசியுள்ளார். இதன் மூலம், தனக்கு ஏற்பட்டுள்ள காயத்தை அவர் மறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காயம் உறுதி செய்யப்பட்டால் அவர் டி-20 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா, அடுத்த இரண்டு போட்டிகளில் ஒரு ஓவரை கூட வீசவில்லை. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரை மட்டுமே வீசினார். இதனால், ஹர்திக்கிடம் ஏதோ தவறு இருப்பதாகவும், அவர் ஏதேனும் காயத்தால் அவதிப்படலாம் என்றும் முன்னாள் விரர்கள் கணிக்கின்றனர்.


காயத்தை மறைக்கிறாரா ஹர்திக்?


இதுதொடர்பாக பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல், “லீக்கில் விளையாடிய முதல் போட்டியில் முதல் ஓவரையே வீசி நீங்கள் உடற்தகுதியுடன் இருப்பதை காட்டினீர்கள். திடீரென பந்துவீச தேவையில்லை என முடிவு செய்கிறீர்கள். அப்படி என்றால் அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று நான் சொல்கிறேன். அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவரிடம் ஏதோ தவறு இருப்பது உறுதி. அது என் உள்ளுணர்வு” என தெரிவித்துள்ளார்.


ஹர்திக் பாண்ட்யா சொல்வது என்ன?


பந்துவீச்சில் ஈடுபடாதது குறித்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் முடிவில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சரியான நேரத்தில் பந்து வீசுவேன். தேவைப்படவில்லை என்பதால் மட்டுமே பந்துவீசவில்லை. காயம் ஏற்பட்டு இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை” என ஹர்திக் விளக்கமளித்து இருந்தார். 


உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவாரா?


கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் போது, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்கினார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இருந்தும் அவர் தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறார். இதனால், அவரது காயம் மேலும் தீவிரமாகலாம். அப்படி நடந்தால் விரைவில் தொடங்க உள்ள, டி-20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவர் இருப்பாரா என்பது சந்தேகமே. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள உலகக் கோப்பை வரும் ஜுன் 2ம் தேதி தொடங்க உள்ளது.