மும்பை, ப்ராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறும் 16வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பஞ்சாபின் பேட்டிங்கை மயங்க் அகர்வாலும், ஷிகர்தவானும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். தொடக்கம் முதலே தடுமாறிய மயங்க் அகர்வால் 9 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானார்.
இதையடுத்து, களமிறங்கிய ஜானி பார்ஸ்டோ பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். ஆனால், அவரது அதிரடி தொடங்கும் முன்பே அவர் பெர்குசன் பந்தில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, தவானுடன் – லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 43 ரன்களை பஞ்சாப் எடுத்தது.
இதையடுத்து, லிவிங்ஸ்டன் அதிரடியில் இறங்கினார். ரஷீத்கான் பந்தில் அவர் கொடுத்த கடினமான கேட்ச்சை ஹர்திக் பாண்ட்யா அற்புதமான பிடித்தார். ஆனால், அந்த கேட்ச்சின் போது ஹர்திக் பவுண்டரி எல்லையை மிதித்ததால் மூன்றாவது அம்பயரால் சிக்ஸ் கொடுக்கப்பட்டது. இதனால், 10வது ஓவரில் பஞ்சாப் 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது.
11வது ஓவரின் முதல் பந்திலே ரஷீத்கான் பந்தில் ஷிகர்தவான் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். 12 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் 100 ரன்களை எட்டியது. லிவிங்ஸ்டன் ஒருபுறம் அதிரடி காட்ட பஞ்சாப் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் அதிரடியில் இறங்கினார். திவேதியா பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்த ஜிதேஷ் சர்மா கொடுத்த எளிதான கேட்ச்சை குஜராத் வீரர் கோட்டை விட்டார். திவேதியாவின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து லிவிங்ஸ்டன் அரைசதத்தை எட்டினார். திவேதியாவின் 13வது ஓவரில் மட்டும் 24 ரன்கள் விளாசப்பட்டது. லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் அதிரடி அரைசதத்தை விளாசினார்.
ஆனால், நல்கண்டே வீசிய அடுத்த ஓவரில் அதிரடி காட்டிய ஜிதேஷ் சர்மா 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலே அதிரடி வீரர் ஓடின் ஸ்மித் அவுட்டானார். ஆனாலும், அடுத்து ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன்- ஷாரூக் அதிரடியாக ஆடி அணியை மீட்டனர். 15 ஓவர்களில் பஞ்சாப் 152 ரன்களை எட்டியது. ஆனால், ரஷீத்கான் வீசிய 16வது ஓவரில் லிவிங்ஸ்டன் 27 பந்தில் 64 ரன்களிலும், ஷாரூக்கான் 8 பந்தில் 15 ரன்களிலும் அவுட்டாகினர். இதனால், பஞ்சாப் அணி 16 ஓவர்களிலே 155 ரன்களை எட்டினாலும் 7 விக்கெட்டுகளை இழந்து நின்றது.
அடுத்த ஓவரில் ரபாடாவும் ரன் அவுட்டாகினார். கடைசியில் கைவசம் 3 ஓவர்கள் இருந்தாலும் பஞ்சாப்பிற்கு பேட் செய்ய பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தடுமாறினர். கடைசியில் ராகுல் சாஹர்- அர்ஷ்தீப் அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை எடுத்தது. இதனால், குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ராகுல் சாஹர் 14 பந்தில் 22 ரன்கள் விளாசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்