Pat Cummins IPL Final: நாளை நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.


உலகக் கோப்பை 2023 நியாபகம் இருக்கா?


கடந்த ஆண்டின் நவம்பர் 19ம் தேதியை இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அகமதாபாத்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில், லீக் சுற்றில் நம்பர் ஒன் அணியாக இருந்த இந்தியாவை வீழ்த்தி பேட் கம்மின்ஸ் தலைமயிலான ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. அதோடு, தொடர்ந்து 10 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத, இந்திய அணியின் வெற்றிப் பயணமும் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில் தான்,  ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் இந்திய மண்ணில் மற்றொரு பெரிய கோப்பையை வெல்லும் வாய்ப்பை பேட் கம்மின்ஸ் பெற்றுள்ளார்.


ஐபிஎல் ஃபைனலில் ஐதராபாத் Vs கொல்கத்தா:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான் அணியை ஐதராபாத் வீழ்த்தியது. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள, இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. இந்த நிலையில் தான், யாருமே எதிர்பாராத விதமாக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஒரு அணி,  மீண்டும் இறுதிப் போட்டியில் தொடரின் சிறந்த அணியை எதிர்கொள்கிறது. இது கடந்தாண்டு நடைபெற்ற ஒரு உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை போலவே காட்சியளிக்கிறது. இதனால் இந்த போட்டியானது ரசிகர்கள் இடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






உலகக் கோப்பை 2023 & ஐபிஎல் 2024 இடையேயான ஒற்றுமை:



  • ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது, சன் ரைசர்ஸ் தனது முதல் ஆட்டத்தில் KKR அணியிடம் தோற்றது.

  • தொடரில் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது , நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி கொல்கத்தா.

  • இந்திய அணி 9 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது, கொல்கத்தா அணி லீக் சுற்றில் 9 வெற்றிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

  • லீக் சுற்று முடிவில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்துடன் கொல்கத்தா அணி லீக் சுற்றை பூர்த்தி செய்தது.

  • இந்திய அணிக்கு மும்பையை சேர்ந்த ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார், கொல்கத்தா அணிக்கும் மும்பையை சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்


ஆனால் 2023 உலகக்கோப்பையில் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. ஆனால் அதேபோன்று இந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் வெல்லுமா அல்லது இத்தனை தடுப்புகளையும் உடைத்து கொல்கத்தா வெல்லுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.