Hardik Pandya: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, கடந்த சில மாதங்களாகவே மனைவிடம் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஹர்திக் - நடாஷா விவாகரத்தா?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் தம்பதி சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்களாகும். ஆனால், கடந்த சில தினங்களாகவே இந்த ஜோடி சமூக வலைதளங்களில் காணப்படவில்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பேற்ற நிலையில் கூட, நடாஷாவை ஒரு போட்டியில் கூட மைதானத்தில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தான் ஹர்திக் மற்றும் அவரது மனைவி நடாஷா விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு, ஹர்திக்கின் சொத்தில் 70 சதவிகிதத்தை, நடாஷா ஜீவனாம்சமாக பெறுவதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
விவாகரத்து செய்தி பரவுவது ஏன்?
நடாஷா ஸ்டான்கோவிச் தனது இன்ஸ்டாகிராம் பயோவிலிருந்து 'பாண்டியா' என்ற குடும்பப்பெயரை நீக்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் அவரது பிறந்தநாளின் போது கூட, ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்களில் எந்த பத்வையும் வெளியிடவில்லை. மகன் அகஸ்தியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தவிர்த்து, ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டு பதிவிடப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும், சமூக வலைதள கணக்கிலிருந்து நடாஷா நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் அவர்கள் பிரிய உள்ளது உறுதியாகிவிட்டதாக பலரும் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஹர்திக் & நடாஷா திருமணம்:
ஹர்திக் பாண்ட்யாவும், நடாஷாவும் 2020 இல் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை பிறந்ததன் மூலம், தம்பதியினர் பெற்றோரானார்கள். 2023 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகின. இந்நிலையில் தான் ஹர்திக் மற்றும் நடாஷா பிரிய உள்ளனர் என பல செய்திகள் பரவி வருகின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், அவர்களின் சமீபத்திய சமூக ஊடக செயல்பாடுகள் ஹர்திக் & நடாஷாவின் விரிசலை காட்டுவதாக உள்ளது.
மும்பை அணியில் ஏமாற்றம்:
ஐபிஎல் தொடரில் மும்பை அணி மூலம் அறிமுகமாகி, இந்திய அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திர ஆல்-ரவுண்டராக தற்போது ஹர்திக் பாண்ட்யா உருவெடுத்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் தொகைக்கு குஜராத் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு, ஒருமுறை கோப்பையையும் வென்றார். இந்நிலையில் தான் நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை அணி மீண்டும் வாங்கியதோடு, கேப்டனாகவும் நியமித்தது. ஆனால், அவருக்கு அணியிலேயே பெரும் எதிர்ப்பு எழுந்ததோடு, ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர். அதற்கேற்றார்போல், நடப்பு தொடரில் 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டும் வென்று, மும்பை அணி நடப்பு தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இந்நிலையில் தான் ஹர்திக்கின் குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.