நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 


முதலில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீசுவதாக முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி முதல் ஓவரில் இருந்தே விக்கெட்டுகளை இழந்தது. பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் குவித்தது. மூன்று முக்கிய விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்திருந்தாலும் களத்தில் டிராவிஸ் ஹெட்டும் ஹென்றிச் க்ளாசனும் இருந்ததால் அணிக்கு நம்பிக்கை இருந்தது. 


இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டி ரன்கள் சேர்த்துவந்தனர். ஒருகட்டத்தில் இருவரும் வெளியேறினர்.இதில் க்ளாசன் மட்டும் 50 ரன்கள் சேர்த்திருந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 




அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் காட்மோர் 4வது ஓவரில் தனது விக்கெட்டினை ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸிடம் இழந்து வெளியேறினார். விக்கெட் கணக்கினை கம்மின்ஸ் தொடங்கி வைத்தாலும், அடுத்து வந்த ஹைதராபாத் அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றினர். 


ஷபாஸ் அகமதுவும் அபிஷேக் சர்மாவும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளியதுடன் ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டிகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. களத்தில் துருவ் ஜுரேலும் ரோமன் பவுலும் இருந்தனர். 


ஆட்டத்தின் 18வது ஓவரை வீசிய நடராஜன் அந்த ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, ரோமன் பவல் விக்கெட்டினையும் கைப்பற்றி, ராஜஸ்தான் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆனால் களத்தில் இருந்த துருவ் ஜுரேல் 19வது ஓவரில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்திருந்தார். 


இறுதியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் அப்போதே ஹைதராபாத் அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இறுதிவரை களத்தில் இருந்த துருவ் ஜுரேல் 35 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஹைதராபாத் அணி நாளை மறுநாள் அதாவது வரும் 26ஆம் தேதி இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளவுள்ளது.