ஐபிஎல் 2024ன் 39வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இதில், சென்னை அணி கொடுத்த 211 ரன்களை துரத்திய லக்னோ அணி, கடைசி ஓவரில் இலக்கை விரட்டி வெற்றிபெற்றது. 


போட்டியின்போது லக்னோ ரசிகர்கள் இருவர் செய்த சம்பவத்தின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த இரண்டு வீடியோக்களிலும், லக்னோ ரசிகர்கள் இரண்டு பேரை சுற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சூழ்ந்திருந்தனர். இருப்பினும், அவர்களை லக்னோ ரசிகர் இருவரும் கதற விட்டனர். 






வைரலான வீடியோவில் என்ன நடந்தது..? 


அந்த  இரண்டு வீடியோக்களில் இரண்டு லக்னோ அணி ரசிகர்கள், லக்னோ அணியை வெற்றியை நோக்கி பயணிக்கும்போது ஒற்றை சிங்கமாக கர்ஜித்தனர். ஒவ்வொரு பவுண்டரிகள், சிக்ஸர்களை லக்னோ வீரர்கள் அடித்தபோது, சென்னை ரசிகர்கள் சோகத்திலும், தோற்றுவிடுவோமா என்ற பயத்திலும் இருந்தனர். அப்போது, லக்னோ அணியின் ஒரு சிறிய ரசிகரும், ஒரு ரசிகரும் மஞ்சள் நிற கடலுக்கு நடுவே, தனித்துவமாக தங்களது அணியின் வெற்றியை கொண்டாடினர். 






போட்டி சுருக்கம்: 


ஐபிஎல் தொடரின் 39வது போட்டி சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து அசத்தினார். இவர் 60 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் எடுத்தார்.


211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் டக் அவுட்டானார். அதன்பிறகு, உள்ளே வந்த லக்னோ அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டோனிஸ் சதம் அடித்தார். இவர் 63 பந்துகளில் 13 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உட்பட 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. இதன்மூலம்,  லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் லக்னோ:


இந்த வெற்றிக்குப் பிறகு லக்னோ 8 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது. ஆனால், அதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான தோல்விகளுடன் லக்னோவின் வெற்றித் தொடர் முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இரண்டு வெற்றிகளை பெற்று முதல் 4 இடங்களுக்குள் சென்றது.