DC Vs GT, IPL 2024: குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 39 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில்  இன்று சுப்மன் கில் தலைமயிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


குஜராத் - டெல்லி மோதல்:


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.டெல்லி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் மூன்றில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவது கட்டாயம். நடப்பு தொடரில் ஏற்கனவே குஜாராத் உடன் மோதிய போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியிலும் அந்த அணி களமிறங்க உள்ளது. குஜராத் அணியோ இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் நான்கில் வென்று, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் நீடிக்கிறது. தொடர் வெற்றிகளை பெற முடியாமல் அந்த அணி தடுமாறி வருகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவது  இந்த அணிக்கும் கட்டாயம். நடப்பு தொடரில் டெல்லிகு எதிரான முதல் போட்டியில், 100 ரன்களை கூட சேர்க்க முடியாமல் குஜராத் படுதோல்வி அடைந்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் குஜராத் அணி இன்று களமிறங்குகிறது.  எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது டெல்லி அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியை பொறுத்தவரையில் பிரித்வி ஷா, மெக்கர்க், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர்.  ஆனால் டேவிட் வார்னர் போன்ற மற்ற முக்கிய வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சில் இஷாந்த் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஓரளவிற்கு நம்பிக்கை தருகின்றனர். குஜராத் அணியில் நட்சத்திர வீரர்கள் குவிந்து இருந்தாலும், அவர்களது சிறப்பான செயல்பாடு களத்தில் வெளிப்படாமல் உள்ளது. இதனால், அந்த அணி தொடர் வெற்றிகளை குவிக்க முடியாமல் திணறி வருகிறது. 


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் மற்றும் டெல்லி தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 162 ரன்களையும், குறைந்தபட்சமாக 92 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 171 ரன்களையும், குறைந்தபட்சமாக 89 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


மைதானம் எப்படி?


டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் மேற்பரப்பு மிகவும் மெதுவாக உள்ளது மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சில உதவிகளை வழங்கும். இருப்பினும், குறந்த பவுண்டரி எல்லைகள் பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட்களை அடிக்க வைத்து வேகமாக ரன்களை எடுக்க வைக்கிறது. டாஸ் வென்ற பிறகு முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த முடிவாக இருக்கும். 


உத்தேச அணி விவரங்கள்:


குஜராத்: விருத்திமான் சாஹா, சுப்மன் கில், கேன் வில்லியம்சன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், அபினவ் மனோகர், ராகுல் திவேதியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர், மோகித் சர்மா


டெல்லி: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்