கடந்த 26ம் தேதி ஐபிஎல் 2024 சீசன் முடிந்தாலும், இன்னும் அதன் தாக்கம் நம்மை விடுவதாய் தெரியவில்லை. ஐபிஎல் வரலாற்றில் இந்த நாள் இரண்டு அணிகளுக்கு என்றுமே மறக்க முடியாத நாள். 


அதில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றொன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 


கடந்த ஆண்டு இதே நாளில்தான் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் 5 முறையாக கோப்பையை உயர்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 


இதன்மூலம், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸூக்கு அடுத்தபடியாக 5 முறை கோப்பையை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்தது. 


முதலில் நிர்ணயிக்கப்பட்ட தேதியை விட ஒருநாள் தாமதமாக குஜராத் - சென்னை அணிகள் 2023 இறுதிப்போட்டியில் மோதியது. மழை காரணமாக இறுதிப்போட்டி ஒருநாள் தாமதமானது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 


இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்களும், விருத்திமான் சஹா 54 ரன்களும் எடுத்திருந்தனர். 


சென்னை அணி களமிறங்கியபோது இரண்டாம் பாதியில் அதிக மழை பெய்ததால், முதலில் நிர்ணயிக்கப்பட்ட 214 ரன் இலக்கை DLS முறையில் 15 ஓவர்களில் 171 ஆக குறைக்கப்பட்டது. 


டெவோன் கான்வே 47 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களும் எடுத்தாலும், குஜராத் பந்துவீச்சில் சென்னை அணி திணறி கொண்டிருந்தது. அதன் பிறகு, ரஹானே 13 பந்துகளில் 27 ரன்களும், அம்பத்தி ராயுடு 8 பந்துகளிலும் குவித்து அசத்தி அவுட்டாகினர். 


மிகவும் எதிர்பார்த்த எம்.எஸ்.தோனி முதல் பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார். 






இதன்மூலம், சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்றது.  


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற நாள்:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் ஐபிஎல் கோப்பை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி கோப்பையை வென்றது. 


முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. 


ஹைதராபாத் அணியின் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 69 ரன்களும், பென் கட்டிங் 39 ரன்களும் எடுத்திருந்தனர். 






அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்த கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோலி சிறப்பான அடித்தளம் அமைத்தாலும், பின்வரிசை வீரர்கள் யாரும் ரன் எண்ணிக்கையை பெரிதாக உயர்த்தவில்லை. இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு வெறும் 200 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்றது.