பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அடித்த ஒரே சிக்சரின் மூலம், இளம் வீரர் நேஹல் வதேரா ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


மும்பை அணியை மீட்ட திலக் - நேஹல்:


பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 48 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  இதையடுத்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த திலக் மற்றும் அறிமுக வீரரான நேஹல் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டிற்கு 50 ரன்களை சேர்த்தது.


பிரமாண்ட சிக்ஸ் அடித்த நேஹல்:


போட்டியின் 14வது ஓவரை ஆர்சிபியின் கரண் சர்மா எதிர்கொண்டார்.  அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட வதேரா சிக்சரை விளாசினார். அதைதொடர்ந்து, கரண் சர்மா வீசிய மூன்றாவது பந்தை வதேரா தூக்கி அடிக்க, அந்த பந்து வானில் பறந்து மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. அந்த சிக்சர் 101 மீட்டர் தூரத்திற்கு சென்று விழுந்தது.  நடப்பு தொடரில் 100 மீட்டர் தூர சிக்சரை விளாசிய முதல் இந்திய வீரர் நேஹல் வதேரா தான். அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய கையோடு, கரண்சர்மா வீசிய அடுத்த பந்திலே கேட்ச் முறையில்  அவர் அவுட்டானார். இறுதியில் 13 பந்துகளை எதிர்கொண்ட நேஹல் மும்பை அணிக்காகன முக்கியமான 21 ரன்களை சேர்த்தார்.