ஐபில் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
16வது ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கடந்த தொடரில் மிகவும் மோசமாக விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. டூப்ளெசிஸ் தலைமையிலான அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்தாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், நடப்பு தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடர இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
பெங்களூரு அணி நிலவரம்:
டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கின்றனர். அதோடு, எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஷபாஸ் அஹமது, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்ளே, முகமது சிராஜ் போன்ற தரமான பந்துவீச்சாளர்களும் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணி நிலவரம்:
கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 5 முறை சாம்பியனான மும்பை அணி, நடப்பாண்டு வெற்றியுடன் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த சீசனில் 8 ஆட்டங்களுக்கு பிறகு தான் முதல் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் க்ரீன் ஆகியோர் பேட்டிங்கில் மல்லுக்கட்ட தயாராகியுள்ளனர். அதோடு பும்ராவின் இடத்தை ஆர்ச்சர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு உறுதுணையாக சந்தீப் வாரியர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் உள்ளனர்.
மோசமான சாதனை முடிவுக்கு வருமா?
அதேபோல் மும்பை அணி கடந்த 10 சீசன்களிலும் தனது முதல் லீக் ஆட்டத்தில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. அந்த மோசமான சாதனையை இந்த போட்டியில் மாற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் தொடர் அறிமுகமானதிலிருந்து விளையாடி வரும் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள், இதுவரை 30 முறை நேருக்கு நேர் எதிர்கொண்டுள்ளன. அதில் பெங்களூரு அணி 13 முறையும், மும்பை அணி 17 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட பெங்களூரு அணி அதனை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.