ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில்  72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் அந்த அணி ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்துள்ளது.


ஆரம்பமே சொதப்பிய ஐதராபாத்:


204 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, ஆரம்பமே பெரும் சறுக்கலாக அமைந்தது. ராஜஸ்தான் அணியின் டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் மூன்று மற்றும் ஐந்தாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமலேயே அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், முதல் ஓவரின் முடிவிலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. 


அடுத்தடுத்து விக்கெட் சரிவு:


முதல் விக்கெட்டில் சரிந்த ஐதராபாத் அணி அதன்பிறகு மீண்டு வரவே இல்லை. ஹாரி ப்ரூக், வாஷின்ஹ்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், அடில் ரஷித் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த மயங்க் அகர்வால், 23 பந்துகளில் 27 ரன்களை சேர்த்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாஹல், அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


முதல் இன்னிங்ஸ் விவரம்:


முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் ஹைதரபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.  20 பந்துகளில் அரைசதம் விளாசிய பட்லர் 22 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பட்லர் மட்டும் 7 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசினார்.  அதன் பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாட 8 ஓவர்களில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 105 ரன்கள் குவித்தது. நிலையான ஆட்டத்தினை ஆடி வந்த தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் தனது அரைசத்தினை கடந்து அசத்தினார்.17வது ஓவரின் முதல் பந்தில் நடராஜன் விக்கெட் வீழ்த்த, அதன் பின்னர் ஹெட்மயர் களத்துக்கு வந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 170ஆக இருந்தது. இதற்கிடையில் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்த சீசனில் 200 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான அணி பெற்றது. ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஃபரூகி மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.