2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் அடுத்த ஆண்டு 16வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் விடுவிக்கும் வீரர்கள் குறித்த தகவலை கடந்த 15-ஆம் தேதிக்குள் விடுவிக்க காலக்கெடு விதித்தது. இதையடுத்து, 4 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன், என். ஜெகதீசன், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, கேஎம் ஆசிஃப் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரை விடுவித்தது. 


டுவைன் பிராவோவை விடுவித்ததே கடும் எதிர்ப்பாக கிளம்பிய நிலையில், என். ஜெகதீசன், ஹரி நிஷாந்த் போன்ற தரம்மிக்க தமிழக வீரர்களை ஏன் சென்னை அணி விடுவித்தது என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. 


இந்தநிலையில், இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழக அணி சிறப்பாக  விளையாடி வருகிறது. அந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் சென்னை அணியில் இருந்து வேண்டாம் என்று விடுவிக்கப்பட்ட ஜெகதீசன்தான். 


விஜய் ஹசாரே டிராபி தொடரில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் தமிழக அணி  9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஜெகதீசன் 114 ரன்கள் குவித்து தமிழக அணியை வெற்றிபெற செய்தார். 


நவம்பர் 15 ம் தேதி சட்டிஸ்கர் எதிரான போட்டியில் 107 ரன்களும், நவம்பர் 17 ம் தேதி கோவாவுக்கு எதிரான போட்டியில் 168 ரன்களும் ஜெகதீசன் குவித்தார். 






இந்தநிலையில், இன்று ஹரியான அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ஜெகதீசன் 123 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரி அடித்து 128 ரன்கள் குவித்தார். இதையடுத்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த 4வது வீரர் என்ற பெருமையை ஜெகதீசன் படைத்தார். இதற்கு முன்னதாக சங்கக்காரா, அல்விரோ பீட்டர்சன், தேவ்தத் படிக்கல் தொடர்ந்து 4 சதங்கள் அடித்திருந்தனர். 


சென்னை அணி மீது எழும் கண்டனம் :


இதுவரை சென்னை அணிக்காக 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜெகதீசன் 77 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2020 ம் ஆண்டு 5 போட்டிகளில் களமிறங்கி 33 ரன்களும், 2022 ம் ஆண்டு 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 40 ரன்களும் எடுத்திருந்தார். 


வெறும் போட்டிகளை மட்டுமே கணக்கில்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெகதீசனை எப்படி வெளியேற்றலாம் என்று தமிழ்நாடு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், ஹரி நிஷாந்த் கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இருந்தும் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பெயரளவில் மட்டும் சென்னை என்று வைத்துகொண்டு தமிழக வீரர்களை புறக்கணித்து வருவதும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமலும்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதேபோல்தான் பாபா அபராஜித், யோ மகேஷ், சாய் கிஷோர் போன்ற பல்வேறு தமிழக வீரர்கள் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


நடராஜன், ஷாரூக் கான், வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் வேறு அணிக்களுக்காக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், சாய் கிஷோர், சாய் சுதர்சன் ஆகியோர் கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த சூழலில், ஜெகதீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்தது நல்லதுதான். அடுத்த வருடமும் ஜெகதீசன் சென்னை அணி இருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. வேறு அணியால் வாங்கப்பட்டு அவரது திறமையை நிரூபிக்க இதுதான் சரியான தருணம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.