கேப்டனாக இருந்த ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு அதிரடியாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திச் சென்ற ரோஹித் ஷர்மா 5 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளார்.
இது 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடியும் வரை யாரும் நெருங்க முடியாத சாதனையாக இருந்தது. 2023ஆம் ஆண்டு சென்னை அணி தனது 5வது கோப்பையை வெல்லும் வரை அந்த புகழுக்குச் சொந்தமான அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும்தான். இந்த சாதனையை சமன் செய்துள்ள சென்னை அணி தனது 6-வது கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ள விஷயம் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதுதான். குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி ட்ரேடிங் முறையில் வாங்கியபோது ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குதித்தனர்.
குறிப்பாக மும்பை அணியின் பேட்டிங் வரிசை குறித்து பேசும் போது கூறப்படும், “மம்பட்டி பேட்டிங் லைன் - அப்” என கூறப்பட்டது. 2024ஆம் ஆண்டு கோப்பை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் தலைமையில் வெல்லும் என கூறப்பட்டது.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, சிலரோ குஜராத் அணியின் கேப்டனாக இருந்து அதன் அறிமுக ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று கொடுத்தது மட்டும் இல்லாமல், அடுத்த ஆண்டில் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்று, இறுதிப் பந்து வரை வெற்றிக்கு போராடிய கேப்டன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஹர்திக் பாண்டியா. இப்படியான வீரர் மீண்டும் மும்பை அணிக்கு வருகின்றார் என்றால் அவர் கேப்டனாகத்தான் வருவார் என புகைச்சல் கிளம்பியது.
இதற்கு அன்றைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் எந்தவிதமான ரியாக்ஷனும் கொடுக்கப்படவில்லை. இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கும்ப்ளே கூறுகையில், குஜராத் அணியின் கேப்டனாகவே ஹர்திக் பாண்டியா இருந்திருந்தாலும் மும்பை அணியில் அவர் வீரராகத்தான் இருக்க முடியும். ரோகித் சர்மாவின் இடத்தை அவரால் நிரப்பவே முடியாது எனக் கூறினார். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறுகையில், மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருக்கும் வரை அவர் மட்டும்தான் கேப்டன்.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனக் கூறினார்.
ஆனால் மும்பை அணியின் நேற்றைய அறிவுப்புக்கு பின்னணியில் ஹர்திக் பாண்டியாவுக்கும் மும்பை அணிக்கும் இடையிலான திரைமறைவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. அதாவது மும்பை அணிக்குதான் வரவேண்டும் என்றால் எனக்கு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்படவேண்டும். அப்படியானால் நான் மும்பை அணிக்கு வருகின்றேன். இல்லையென்றால் இந்த பேச்சினை தன்னிடம் மீண்டும் கொண்டுவராதீர்கள் எனக் கூறியுள்ளார். இதனை நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போதே மும்பை அணி ரோகித் சர்மாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. அதாவது மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை ட்ரேட் செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் அவரை 2024ஆம் ஆண்டு ஐபிஎல்-க்கான கேப்டனாகவும் நியமிக்கவுள்ளது எனவும் ரோஹித் ஷர்மாவிடம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதற்கு ரோஹித் ஷர்மா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இதனால்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளாராம்.