IPL 2023: ஐபிஎல் தொடரில் மிகவும் பலமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 16வது சீசன் 80 சதவீத லீக் போட்டிகள் முடிந்து விட்டன. தற்போது வரை ஒரு அணி கூட ப்ளேஆஃப்க்கு இன்னும் தகுதி பெறாத நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டும் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பினை இழந்துள்ளது.
தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் அணி 16 புள்ளிகளுடன் இருந்தாலும் இன்னும் ப்ளேஆஃப் வாய்ப்பை 100 சதவீதம் உறுதி செய்ய ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதேபோல், 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றாக வேண்டும். அப்போது தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஆனால் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த மும்பை அணி நேற்று (மே, 11) கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பெற்ற பிரமாண்ட வெற்றியால் ராஜஸ்தான் மூன்றாவது இடத்துக்கு தாவ, மும்பை அணி நான்வது இடத்துக்கு சறுக்கியது. மும்பை அணி சறுக்கியதற்கு முக்கிய காரணம் ரன்-ரேட் தான். ஐந்தாவது இடத்தில் 11 புள்ளிகளுடன் உள்ள லக்னோ அணி மும்பை அணியை விட அதிக ரன்-ரேட்டில் உள்ளது.
மும்பை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவேண்டுமானால், மீதமுள்ள மூன்று போட்டிகளையும் வென்றால் மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் ரன்-ரேட் என எதையும் கண்டுகொள்ளாமல் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க முடியும். அதேநேரத்தில் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட மும்பை அணியால் ப்ளேஆஃப் வாய்ப்புக்கு வாய்ப்புகள் உள்ளது. அதுவும் தற்போதைய நிலவரப்படி லக்னோ அணியுடனான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும்.ஒருவேளை மும்பை அணி மூன்று போட்டியில் ஒரு வெற்றியைப் பெற்று இரண்டு தோல்விகளைச் சந்தித்தால் ப்ளேஆஃப் வாய்ப்பு என்பது இல்லைவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மும்பை அணி தற்போது உள்ள பேட்டிங் வரிசையையும் அதன் பர்ஃபாமன்ஸையும் வைத்துப் பார்க்கும் போது கடந்த மூன்று போட்டிகளில் 200 மற்றும் 200 ரன்களுக்கு மேல் எடுத்து அதகளப்படுத்தியுள்ளது. இந்த பேட்டிங் வரிசை மும்பை அணிக்கு புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மும்பை அணிக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்யும் என எதிர்பார்க்கலாம். ஆனால் மும்பை அணிக்கு உள்ள பிரச்சனை பந்து வீச்சும் கேப்டன் ரோகித் சர்மாவின் பார்ம்-அவுட்டும் தான்.