கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஜெய்ஷ்வாலுக்காக, ராஜஸ்தான் வீரர்கள் செய்த செயல் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டுகளை பெற்று வருகிறது. குறிப்பாக சாம்சனின் செயல்பாடு, ஒரு போட்டியில் கோலிக்காக கேப்டன் தோனி விட்டுக்கொடுக்கும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் அணி அபார வெற்றி:
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றையை லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. கொல்கத்தா அணி நிர்ணயித்த 150 ரன்கள் என்ற இலக்கை வெறும் 13.1 ஓவர்களிலேயே எட்டியது ராஜஸ்தான் அணி. அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ஜெய்ஷ்வால் வெறும் 47 பந்துகளில் 98 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டு இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், இந்த போட்டியில் ஜெய்ஷ்வாலுக்காக பட்லர் மற்றும் சாம்சன் செய்த காரியம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி நல்ல பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
பட்லர் ரன் - அவுட்:
இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான ஜெய்ஷ்வால், முதல் ஓவரிலேயே 26 ரன்களை குவித்து அசத்தினார். தொடர்ந்து, இரண்டாவது ஓவரை பட்லர் எதிர்கொண்ட போது முதல் மூன்று பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதையடுத்து, நான்காவது பந்து காலில் பட்டு சிறிது தூரம் செல்ல, மறுமுனையில் இருந்த ஜெய்ஷ்வால் உடனடியாக ரன் எடுக்க ஓடினார். பட்லர் மறுத்ததை கவனிக்காமல், ஜெய்ஷ்வால் பாதி தூரம் வரை சென்று விட்டார். இதை கண்ட பட்லர் தனது விக்கெட்டை தாமாகவே விட்டுக்கொடுத்தார். பொதுவாக மூத்த வீரர்களுக்காக இளம் வீரர்கள் தான் விக்கெட்டுகளை விட்டுக் கொடுப்பர். ஆனால், பட்லர் மாதிரியான ஒரு அதிரடி வீரர், ஜெய்ஷ்வாலுக்காக விட்டுக் கொடுத்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வைடை தடுத்து நிறுத்திய சாம்சன்:
இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சாம்சன் - ஜெய்ஷ்வால் கூட்டணி கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இதனால், 12.5 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 147 ரன்களை குவித்துவிட்டது. அப்போது ஜெய்ஷ்வால் 94 ரன்களுடனும், சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெற்றிக்கு வெறும் 4 ரன்களே தேவைப்பட்டது. சுயாஷ் சர்மா வீசிய 13வது ஓவரின் கடைசி பந்தை, சாம்சன் எதிர்கொண்டார். ஆனால், சுயாஷ் வீசிய பந்து லெக் சைடில் வைடாக சென்று, பவுண்டரி செல்லும் வகையில் இருந்தது. ஆனால், அதை உடனடியாக கணித்த சாம்சன், அந்த பந்தை தனது காலால் தடுத்து நிறுத்தினார். இதன் மூலம், மறுமுனையில் நின்றிருந்த ஜெய்ஷ்வால் 100 ரன்களை பூர்த்தி செய்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த செயல் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்துஇரண்டு ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் ஜெய்ஷ்வால்.
தோனி - கோலி:
சாம்சனின் இந்த செயலை தோனியுடன் ஒப்பிட்டு, ராஜஸ்தான் அணி டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “2014ம் ஆண்டு டி-20 உலககோப்பை தொடரின் அரை இறுதிப்போட்டியில், சிறப்பாக விளையாடிய கோலி தான் வெற்றிக்கான கடைசி ரன்னை அடிக்க வேண்டும் என தோனி விட்டுக் கொடுத்ததை” ராஜஸ்தான் அணி நினைவு கூர்ந்துள்ளது. நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், ஜெய்ஷ்வாலுக்காக கேப்டன் சாம்சன் மற்றும் பட்லர் ஆகியோர் செய்த மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.