நான் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்தால், எதிர்வரும் உலகக்கோப்பைக்காக இன்றே இதைச் செய்திருப்பேன் என மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா சுவாரஸ்யமான ஒன்றை கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் புதிய திறமையான வீரர்கள் அடையாளப்படுகின்றனர். அவ்வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அடையாளப்பட்ட நபர்களில் ஒருவர் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஷ்வால். விக்கெட் கீப்பரும் இடது கை பேட்ஸ்மேனுமான இவரது ஆட்டத்தினைப் பார்த்து இந்திய கிரிக்கெட் அணியின் வீரரகள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் ஆச்சரியப்படுவதுடன் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த தொடரில் மும்பை அணிக்கு எதிராக 62 பந்தில் 124 ரன்கள் விளாசியிருந்தார். அதேபோல் நேற்று (மே, 11) கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 150 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திப் பிடிக்கும் போது 47 பந்தில் 98 ரன்கள் குவித்து 2 ரன்களில் சதத்தினைத் தவறவிட்டார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்ததுடன், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்குச் சென்றது.
தனது ருத்ரதாண்டவ பேட்டிங்கினால் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை ஜெய்ஷ்வால் நேற்று படைத்தார். அதாவது, 13 பந்தில் அரைசதம் விளாசினார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகக்குறைந்த பந்தில் அடிகப்பட்ட அரைசதம் இதுதான். இதனைப் பாராட்டிய விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவும் இட்டிருந்தார். மேலும், பலரும் ஜெய்ஷ்வாலை பாராட்டி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்பட்டவருமான ரெய்னா மேலும் ஒரு படி சென்று, “நான் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் இருந்திருந்தால் எதிர்வரும் உலககோப்பை தொடருக்காக ஜெய்ஷ்வாலை இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இது போன்ற ஒரு வீரரைத்தான் தேடிக்கொண்டு இருப்பார் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார். ரெய்னாவின் இந்த கருத்து அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 12 ஐபிஎல் லீக் போட்டியில் விளையாடியுள்ள ஜெய்ஷ்வால் இதுவரை 4 அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசியுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 575 ரன்கள் குவித்துள்ள ஜெய்ஷ்வாலின் அவரேஜ் ஸ்கோர் 52.27 ஆனவும் ஸ்ட்ரைக் ரேட் 167.15ஆகவும் உள்ளது. இவர் இதுவரை 74 பவுண்டரிகள் விளாசியுள்ளதால், அதிக பவுண்டரிகள் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மேலும், 2 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார்.
ஜெய்ஷ்வால் இந்த போட்டியின் தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை இழந்து இருப்பார். ஆனால் அவருக்காக அவரது அணியில் இருந்த சக வீரர்கள் செய்தது மிகவும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. அது குறித்த கூடுதல் விபரத்துக்கு.... RR vs KKR, IPL 2023: இது ராஜஸ்தான் டீமா?.. இல்ல, விக்ரமன் சார் படமா?..ஜெய்ஷ்வாலுக்காக இப்படியா?