ஐ.பி.எல். தொடரில் ஷார்ஜாவில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. மும்பை அணிக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.


இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், குயின்டின் டி காக்கும் ஆட்டத்தை தொடங்கினர். நோர்ட்ஜே வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலே பவுண்டரியுடன் ரோகித் சர்மா தொடங்கினர். இரண்டாவது ஓவரை டெல்லி அணியின் வளரும் வீரர் ஆவேஸ்கான் வீசினார். அவரது முதல் நான்கு பந்துகளில் தடுமாறிய ரோகித்சர்மா 5வது பந்தை சிக்ஸருக்கு அனுப்ப முயன்று ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 10 பந்துகளில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.




இதையடுத்து, டி காக்கும் – சூர்யகுமார் யாதவும் இணைந்து அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் செல்ல நிதானமாக ஆடினர். அப்போது, அக்ஷர் படேல் பந்துவீச்சில் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குயின்டின் டி காக் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் – சவுரப் திவாரி இணை சற்று அதிரடியாக ஆடியது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் துரிதமாக ரன்களை சேர்த்தார். ஆனால், அக்‌ஷர் படேல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 33 ரன்களை எடுத்தார். மும்பை அணி 12 ஓவர்களில் 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.


பொல்லார்ட் களமிறங்கிய சிறிது நேரத்தில் சவுரப் திவாரியும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் பொல்லார்ட் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்த்த மும்பை ரசிகர்களுக்கு நோர்ட்ஜே அதிர்ச்சி அளித்தார். அவர் வீசிய பந்தில் டேஞ்சர் பேட்ஸ்மேன் பொல்லார்ட் 6 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகினார். இதையடுத்து, பாண்ட்யா சகோதரர்கள் ரன்களை எடுக்க முயற்சித்தனர். ஆனால், மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததால் அவர்களால் ரன்களை எடுக்க முடியவில்லை. இதனால், பலமிகுந்த மும்பை அணி 17வது ஓவர் முடிவில்தான் 100 ரன்களை கடந்தது.




இந்த நிலையில் 18வது ஓவர் முதல் ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். முதல் பந்து, மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த நிலையில், டெல்லியின் நம்பிக்கை பந்துவீச்சாளர் ஆவேஸ்கானின் பந்தில் ஹர்திக் பாண்ட்யா போல்டாகி வெளியேறினார். அவரை போல்டாக்கிய சிறிது நேரத்தில் அடுத்து களமிறங்கிய கூல்டர் நைலையும் ஆவேஸ்கான் போல்டாக்கி வெளியேற்றினார்.


20வது ஓவரை அஸ்வின் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலே ஜெயந்த் யாதவ் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். ஆனால், அடுத்த பந்தில் ஜெயந்த் அவுட்டாகினார். இறுதியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி வீரர் ஆவேஸ்கான் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஷர் படேலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால், அஸ்வின் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.