நடப்பு ஐபிஎல் சீசனில், சிறப்பாக விளையாடி வரும் டாப் நான்கு அணிகளுக்கும் வலுவான ஓப்பனிங் பேட்டர்கள் அமைந்திருப்பது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அசத்தலாக ஓப்பனிங் களமிறங்கும் ருதுராஜ் - டுப்ளெசிதான் இதுவரை இந்த சீசனின் சிறந்த ஓப்பனிங் இணை.

நம்பர்கள் சொல்வது என்ன?

ஐபிஎல் வரலாற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி இருக்கும் ஓப்பனர்களில், ருதுராஜ் - டுப்ளெசி இணை சிறந்த இணையாக அதிக ரன்கள் சேர்த்துள்ளது.  சென்னை சூப்பர் கின்ஸ் அணி விளையாடியுள்ள கடைசி மூன்று போட்டிகளிலும், ருதுராஜ் - டுப்ளெசி இணை 70+ ரன்கள் ஸ்கோர் செய்துள்ளது. 

நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதி தொடங்குவதற்கு முன்பு டுப்ளெசிக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் அணியில் இடம் பெற மாட்டார் என அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனால், யாரை ஓப்பனிங் களமிறக்கிவிடலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் ஆலோசனை செய்தனர். ஆனால், டுப்ளெசியே களமிறங்கியதால், சென்னை அணிக்கு சாதகமானது. முதல் பாதியைப் போல இரண்டாம் பாதியிலும் கலக்கி வருகின்றது இந்த இணை.

சிஎஸ்கே - சிறந்த ஓப்பனர்கள் இதுவரை

591* ருதுராஜ் - டுப்ளெசி 2021
587 மைக் ஹஸ்ஸி - ரெய்னா 2013
540 மைக் ஹஸ்ஸி - முரளி விஜய் 2013
513 பிராண்டன் மெக்கலம் - டுவேன் ஸ்மித் 2014

இந்த சீசனின் சிறந்த ஓப்பனர்கள், இதுவரை:

நடப்பு சீசனின் 44வது போட்டிக்கு பிறகு எடுக்கப்பட்ட தரவுகளில், ருதுராஜ் - டுப்ளெசி இணை 599* ரன்கள் எடுத்து இந்த சீசனின் சிறந்த ஓப்பனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக களமிறங்கும், ப்ரித்வி ஷா - தவான் 550* ரன்களோடு இரண்டாவது இடத்திலும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்கும் கோலி - படிக்கல் இணை 475* ரன்களோடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் அதிக வெற்றிகளோடு  ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் இரு அணிகளின் ஓப்பனர்களும், ப்ளே ஆஃப்புக்கு தகுதி பெற அதிகம் வாய்ப்புகள் உள்ள பெங்களூரு அணியின் ஓப்பனர்களும் இந்த பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.