மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடையுடன் 18,000 குழந்தைகள் நீதா அம்பானியுடன் சேர்ந்து இன்றைய போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.
மும்பை vs டெல்லி:
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்மையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 20 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடின. அதன்படி இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடையுடன் 18,000 குழந்தைகள் வான்கடே மைதானத்தில் அமர்ந்து நேரடியாக போட்டியை கண்டு ரசித்தனர். குழந்தைகள் அனைவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி சார்பில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதை அடுத்து ஹர்திக் பாண்டியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதால் அதை தவிர்க்கவே குழந்தைகளை அழைத்து வந்து இருக்கின்றனர் என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. ஆனால் உண்மை அதுவல்ல. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஒரு பிரிவான ரிலையன்ஸ் அறக்கட்டளை ( Corporate Social Responsibility ) மூலம் அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு (Education & Sports For All) என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் ஒரு போட்டியை காண ஆயிரக்கணக்கில் பள்ளிக் குழந்தைகள் அம்பானி குழும நிறுவனங்களின் சார்பில் அழைத்து வரப்படுகின்றனர். மேலும், ஐபிஎல் டிக்கெட்கள் விற்கும் முன்பே குழந்தைகளை எந்தப் போட்டிக்கு அழைத்து வருவது என்பதை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்து விடும். இச்சூழலில் தான் சுமார் 18,000 குழந்தைகளை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டியை நேரடியாக பார்ப்பதற்கு அழைத்து வந்திருக்கிறது ரிலையன்ஸ் அறக்கட்டளை.
வெற்றியுடன் கொண்டாடுவோம்:
இதனிடையே இன்றைய போட்டியில் 18,000 குழந்தைகள் மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸி அணிந்து தங்கள் அணிக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார்.
" 18,000 குழந்தைகள் மைதானத்திற்கு வந்து எங்களை அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதை பார்ப்பதற்கு எப்போதும் எங்கள் அணியினருக்கு சந்தோசமாக இருகும். அது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும். குழந்தைகள் வந்திருக்கும் இந்த நாளை நாங்கள் வெற்றியுடன் கொண்டாடுவோம். இந்த விளையாட்டுகளின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அவர்களின் வாழ்க்கையில் சிறிய அளவில் பங்களிப்பு செலுத்துவதற்கும் நான் மிகவும் பாக்கியமாக உணர்கிறேன்." என்று பேசியுள்ளார்.
குழந்தைகளின் முகத்தில் புன்னகை:
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், "மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைகளின் கதையும் எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த குழந்தைகளின் வாழ்க்கை கடினமானது. குழந்தைகளுக்குத் தேவையானதைக் கொடுப்பதற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் நீதா அம்பானி ஆகியோர் செய்யும் பணி மிகவும் முக்கியமானது. இந்த போட்டியை நேரடியாக பார்ப்பது குழந்தைகளின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துவதாக இருக்கும். அவர்கள் இன்றைய போட்டியை மகிழ்ச்சியுடன் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வது எங்களின் கடமை மற்றும் பொறுப்பு" என்று கூறியுள்ளார்.
அவர்கள் சொன்னது போலவே இந்தப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லி அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியுள்ளது.
முன்னதாக அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு என்ற நோக்கில் ரிலையன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.