ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உண்டாக்கும் ஒரு அணி என்றால் அது ஆர்.சி.பி. என்றே சொல்லாம். அதுவும் கடந்த சில சீசன்களாகவே ஆர்.சி.பி. அணி மீதான எதிர்பார்ப்பு என்பது உச்சத்திற்கு சென்று கொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்.சி.பி. மீது மிகுந்த எதிர்பார்ப்புடனும், அவர்களை மிகுந்த ஆர்வத்துடன் வைத்திருப்பதற்கு ஒரே காரணம் விராட் கோலி எனும் மாபெரும் வீரன் மட்டுமே ஆகும்.


தொடரும் தோல்வி:


ஒரு சீசன், இரண்டு சீசன் என இல்லாமல் 17 சீசன்களாக தான் சார்ந்த அணிக்காக ஒவ்வொரு சீசனிலும் போராடி வரும் ஒரு வீரர் விராட் கோலி. பல சீசன்களில் பெங்களூர் அணிக்காக தனி ஆளாக போராடியதை நாம் பார்க்க முடிகிறது. ஆனாலும், அந்த அணியால் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.


கோப்பையை கைப்பற்ற 2016ம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி. அணி தவறவிட்டது. இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள ஆர்.சி.பி. அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோற்றுள்ளது. ஆர்.சி.பி. அணியில் கடந்த பல சீசன்களாக இருக்கும் முக்கிய பிரச்சினையே அந்த அணியின் பந்துவீச்சு என்றே கூறலாம். நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங்கும் அதனுடன் சேர்ந்து கொண்டது.


சொதப்பும் பந்துவீச்சு:


ஜெய்ப்பூரில் நேற்று போட்டி நடைபெற்ற மைதானம் பேட்டிங்கிற்கு முழுவதும் ஒத்துழைக்கவில்லை என்றே கூற வேண்டும். ஏனென்றால் வழக்கமாக தொடக்கம் முதலே அதிரடியாக ஆடும் டுப்ளிசிசே நேற்றைய போட்டியில் 33 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 44 ரன்கள் மட்டுமே எடுத்தார். ராஜஸ்தான் அணியினரும் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர்.


ஆனால், எதிரணியை வீழ்த்த 184 ரன்கள் என்பது நல்ல சவாலான இலக்கு என்றே கூறலாம், ஆனால், தொடக்கத்திலே ஆபத்தான வீரர் ஜெய்ஸ்வாலை அவுட்டாக்கிய பெங்களூர் அணி அதன்பின்பு பந்துவீச்சில் சோடை போனது. டோப்ளே, யஷ் தயாள், முகமது சிராஜ், மயங்க் தாகர், கிரீன், ஹிமான்ஷூ என யார் வீசியும் எந்த பலனும் அளிக்கவில்லை.


மோசமான ஃபீல்டிங்:


விக்கெட் வீழ்த்த முடியாத பவுலிங்கின்போது ஃபீல்டிங்கை சிறப்பாக செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், நேற்றைய போட்டியில் எப்போதும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் விராட் கோலியே பட்லருக்கான ஒரு கேட்ச்சை விட்டார். இது ஆட்டத்தையே மாற்றியது.


ராஜஸ்தான் அணியினர் பவுண்டரி செல்ல வேண்டிய பல பந்துகளை சிறப்பான ஃபீல்டிங்கால் தடுத்தனர். ஆனால், பெங்களூர் அணியினரோ ஓரிரு ரன்கள் செல்ல வேண்டிய பந்துகளை மட்டமான ஃபீல்டிங்கால் பவுண்டரிக்கு தாரை வார்த்தனர். அதை நேற்றைய போட்டியில் கண்கூடாக பார்க்க முடிந்தது.


ஒரு விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்தால் அதை எவ்வாறு உடைப்பது என்பதில் யோசனை செல்லாமல், ஆட்டம் நம் கையை விட்டுச் செல்கிறது என்பது போலவே ஆர்.சி.பி. வீரர்கள் பந்துவீசுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. வெளிநாட்டு வீரர் டோப்ளே, இந்திய அணியின் பிரதான பவுலர் சிராஜ் என அனைவரையும் ரன்களை வாரி வழங்க மட்டுமே செய்கிறார்கள்.


மனதளவில் மீண்டு வருவது எப்போது?


யஷ் தயாள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார். அதை அவர் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். கேமரூன் கிரீன். மேக்ஸ்வெல் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வழக்கமாக ஃபினிஷிங் ரோலில் ஆடும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக நேற்றைய போட்டியில் கிரீனை களமிறக்கினர். அவர் 6 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.


டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்டத்தில் 6 பந்துகள் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் ஏன் களமிறக்கப்பட்டோம் என்பது போல பேட் செய்தார். புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள பெங்களூர் அணி அடுத்தடுத்த போட்டிகளில் மனதளவில் மீண்டு வருவதுடன், தங்களது ஆட்ட வியூகத்தையும் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.


தொடர்ந்து சொதப்பி வரும் கிரீனுக்கு பதிலாக அதிரடியில் அசத்தக்கூடிய வில் ஜேக்சுக்கு வாய்ப்பு வழங்கலாம். யஷ் தயாளுக்கு பதிலாக வேற பந்துவீச்சாளரை பயன்படுத்தி பாரக்கலாம். பேட்டிங்கில் டுப்ளிசிஸ், விராட் கோலி ஆகியோரை மட்டுமே நம்பியிருக்காமல் மற்ற வீரர்களும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக்கை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். பிரபுதேசாய், லோம்ரார் போன்ற வீரர்களும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.


தன்னம்பிக்கை அவசியம்:


பெங்களூர் அணியின் தற்போதைய பந்துவீச்சே தொடரும் என்றால் அந்த அணியினர் ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதனால், அவர்கள் பந்துவீச்சை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். அதுமட்டுமில்லாமல் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்பதற்கு போல அவர்கள் ஃபீல்டிங்கும் இருக்க வேண்டியது அவசியம்.


இவையனைத்தையும் விட தன்னம்பிக்கை என்பது மிக மிக அவசியம் ஆகும். அணியின் தொடக்க வீரர் முதல் கடைசி வீரர் வரை தன்னம்பிக்கையுடன் ஆட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும். தன்னம்பிக்கையுடன் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் செயல்பட்டால் மட்டுமே ஆர்.சி.பி. வெற்றி பெறும். ஆர்.சி.பி. ரசிகர்களை காட்டிலும் பெங்களூர் அணி வீரர்கள் மனதளவில் துவண்டு இருப்பார்கள் என்பது உண்மையே. ஆனால், தன்னம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் களமிறங்கி, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் பெங்களூர் அணிக்கு வெற்றி வசப்படும்.