ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.


ரோகித் - இஷன் மிரட்டல் தொடக்கம்:


மும்பை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அந்த அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் திரும்பியுள்ளார். இது அந்த அணிக்கு பலமாக அமைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித்சர்மாவும், அதிரடி வீரர் இஷான் கிஷனும் ஆட்டத்தை தொடங்கினர். முதல் ஓவரிலே பவுண்டரியுடன் இஷான் கிஷன் அதிரடியைத் தொடங்கினார். அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக ரோகித் சர்மாவும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இதனால், 3 ஓவர்களில் மும்பை 33 ரன்களை எட்டியது.


அச்சுறுத்திய அக்‌ஷர்:


பவர்ப்ளேவிற்குள் நல்ல ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் ஓரிரு ரன்களை காட்டிலும் பவுண்டரி, சிக்ஸரிலே ரன்களை சேர்த்தனர். இதனால், 5வது ஓவரிலே அக்‌ஷர் படேலை ரிஷப் பண்ட் அழைத்தார். ஆனாலும் எந்த பலனும் கிட்டவில்லை. ரோகித் சர்மா பவுண்டரியாக விளாசியதால் மும்பை அணி 5வது ஓவரிலே 50 ரன்களை எட்டியது. பவர்ப்ளே முடிவில் மும்பை அணி 75 ரன்களை எட்டியது. அபாரமாக ஆடி அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித்சர்மா 49 ரன்களில் போல்டானார். அவர் 27 ரன்களில் 6 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் அவுட்டானார்.


இதையடுத்து, ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஆனால், அவர் நோர்ட்ஜே பந்தில் டக் அவுட்டானர். இதனால், மும்பை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, இஷன் கிஷனுடன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். இஷன் கிஷன் அதிரடியாகவே ஆடியதால் மும்பை அணி 9.5 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.


ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்ததால் ஏற்பட்ட பின்னடைவை இஷன் கிஷன் தனது அதிரடியால் சரி செய்தார். ஆனால், அவரையும் அக்‌ஷர் படேல் தனது சுழலில் காலி செய்தார். அதிரடியாக ஆடிய இஷன்கிஷன் 23 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து ஹர்திக் பாண்ட்யாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இதையடுத்து, டெல்லி அணி மும்பைக்கு பந்துவீச்சில் நெருக்கடி அளிக்க முயற்சித்தனர். திலக் வர்மா 6 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி ரன் சேகரிப்பில் தொய்வு ஏற்பட்டது. இதனால், 15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.


மிரட்டிய டிம் டேவிட் - ஷெப்பர்ட்:


இதனால், கடைசி 5 ஓவர்களில் அதிரடிக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு மும்பைக்கு ஏற்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவும் – டிம் டேவிட்டும் அதிரடியாக ஆட முயற்சித்தாலும் டெல்லி வீரர்கள் கட்டுக்கோப்பாக வீசினர். டிம் டேவிட் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசினார். ஹர்திக் பாண்ட்யாவும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். நோர்ட்ஜே வீசிய 18வது ஓவரில் மட்டும் 16 ரன்கள் வந்தது.


கடைசி கட்டத்தில் டெல்லி வீரர்கள் ஒயிட் நிறைய வீசியது மும்பைக்கு சாதகமாக அமைந்தது. இதனால், 19வது ஓவரிலே மும்பை 200 ரன்களை கடந்தது. கடைசி ஓவரில் ஷெப்பர்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி, 2வது பந்தில் சிக்ஸர், 3வது பந்தில் சிக்ஸர், 4வது பந்தில் சிக்ஸர், 5வது பந்தில் பவுண்டரி, கடைசி பந்தில் சிக்ஸர் விளாசினார். இதனால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 238 ரன்களை எடுத்தது.


ஷெப்பர்ட் 10 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 39 ரன்களுடனும், டிம் டேவிட் 21 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.