ஐபிஎல் 16வது சீசனில் கோப்பையை வென்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு ஆலோசனை பெறுவதற்காக நேராக மும்பை சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஐபிஎல் 2023 சீசனில் பங்கேற்வதற்கு முன்பில் இருந்தே எம்.எஸ்.தோனிக்கு இடது முழங்காலில் பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு தோனி, மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் காயம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். (ரிஷப் பண்ட்க்கு விபத்து நடந்தபோது கோகிலாபென் மருத்துவனையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது)


இந்தநிலையில், இன்று மும்பை மருத்துவமனைக்கு சென்ற தோனி, முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து கிரிக்பஸ் வெளியிட்ட அறிக்கையில், “எலும்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவமனையில் ஸ்போர்ட்ஸ் மெடிசின் இயக்குநராக இருக்கும் டின்ஷா பார்திவாலாவிடம் எம்.எஸ்.தோனி ஆலோசனை நடத்தி வருகிறார்.” என குறிப்பிட்டு இருந்தது. 






கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி தற்போது குணமடைந்து வரும் ரிஷப் பண்ட்டுக்கு சிகிச்சை அளித்தவர் இந்த டாக்டர் பார்திவாலா என்பது குறிப்பிடத்தக்கது. மும்பைக்கு செல்வதற்கு முன்பு தோனி, சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தோனியுடன் சிஎஸ்கே நிர்வாகம் தங்கள் குழு மருத்துவரான மது தொட்டப்பிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. 


இந்த காயத்தின் நிலைமையை பொறுத்தே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரியவரும். 






மேலும், இதுகுறித்து பேசிய சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன், “ எம்.எஸ்.தோனி டாக்டர் பார்திவாலா வை சந்திக்க சென்றுள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு அடுத்த சீசனுக்குள் அவர் முழுமையாக குணமடைந்து தயாராகிவிடுவார்.” என்று தெரிவித்தார். முன்னதாக, ஐபிஎல் சீசன் தொடக்கத்திலேயே பேசிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், “ சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டு வருவது உண்மைதான். அவரது நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த காயத்தினால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலக வாய்ப்பில்லை “ என தெரிவித்தார்.