ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி கோப்பையை வென்று தருமாறு கோரிக்கை விடுத்த பெங்களூரு அணி ரசிகர்களுக்கு தோனி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் உலகளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 10 அணிகள் விளையாடி வருகிறது.
நடப்பாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் சில தினங்களுக்கு முன் துபாயில் நடைபெற்றது. இதில் பல வீரர்கள் எதிர்பாராத தொகைக்கு ஏலம் போயினர். இப்படியான நிலையில் அனைவரது கவனமும் மார்ச் மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரை நோக்கி உள்ளது.
இந்த தொடர் சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி மிகவும் ஸ்பெஷலான ஒன்று. காரணம் எல்லா அணிகளும் தங்களுடைய கேப்டனை மாற்றி விட்ட நிலையில் சென்னையின் அணியின் கேப்டனாக தோனி 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு கிரிக்கெட்டுக்கு குட் பை சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தோனியின் பங்களிப்பு கிரிக்கெட்டில் எப்போதும் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்களுடன் தோனி உரையாடினார். அப்போது பெங்களூரு அணியின் தீவிர ரசிகர் தோனியிடம், ‘நான் தீவிர பெங்களூரு அணி ரசிகன். நீங்கள் சென்னை அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளீர்கள். பெங்களூரு அணிக்காக கோப்பையை வென்று தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த தோனி, “பெங்களூரு அணி மிகவும் நல்ல அணி. இங்கு நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில், எல்லாமே திட்டமிட்டபடி நடக்காது. நீங்கள் ஐபிஎல் பற்றி பேசுகிறீர்கள் என்பதால் இதில் விளையாடும் 10 அணிகளும் மிகவும் வலுவாகவும், அதே சமயம் திறமையான வீரர்களையும் கொண்டுள்ளது. காயம் உள்ளிட்ட சில காரணங்களால் வீரர்கள் விளையாட முடியாத போது சிக்கல் எழுகிறது.
ஐபிஎல் போட்டிகளில் அனைவருக்கும் ஒரு சமமான வாய்ப்பு என்பது உள்ளது. மேலும் எனது சொந்த அணியில் நான் கவலைப்பட நிறைய விஷயங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அதைத்தவிர என்னால் வேறு எதையும் செய்ய முடியாது. மற்ற அணிகளுக்கு உதவ நான் வெளியே செல்வதை எங்கள் ரசிகர்கள் எப்படி உணருவார்கள்? என்பதை கற்பனை செய்து பாருங்கள்” என பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.