2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று அதாவது டிசம்பர் 19ஆம் தேதி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு தொடனிய இந்த ஏலம் இரவு 9.30 மணி வரைக்கும் நடைபெற்றது. இதில் மொத்தம் 333 வீரர்கள் ஏலம் கூறப்பட்டார்கள். இந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர் என்றால் அது, ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க். இவரை கொல்கத்தா அணி ரூபாய் 24.75 கோடிக்கு வாங்கியது. இவரை அடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூபாய் 20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.
இந்த ஏலத்திற்கு முன்னதாக அணிகளுக்கு இடையில் வீரர்கள் ட்ரேட் செய்யப்பட்டனர். அதில் மிகவும் முக்கியமான ட்ரேடாக பார்க்கப்பட்டது, மும்பை இந்தியன்ஸ் அணி செய்ததுதான். மும்பை அணி தன்னிடம் இருந்த ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் கேமரூன் க்ரீனை பெங்களூரு அணிக்கு விற்றுவிட்டு, அந்த தொகையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வாங்கியது. இது ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது. இது மும்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் விளைவு மும்பை அணியின் சமூகவலைதளப் பக்கங்களை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பின் தொடர்வதை ரத்து செய்தனர். இதனால் மும்பை அணியின் ஃபளோவர்ஸ் எண்ணிக்கை குறைந்தது.
மும்பை அணியின் இந்த நடவடிக்கைக்கு பின்னர் மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சென்னை அணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் மும்பை அணியின் நடவடிக்கையால் அதிருப்தியில் உள்ள வீரர்களை சென்னை அணி நிர்வாகம் தங்களது அணிக்காக விளையாட அழைப்பு விடுத்துள்ளதாகவும் பேச்சுகள் அடிப்பட்டது. ஐபிஎல் மினி ஏலத்திற்கு பின்னர் இவர்களை சென்னை அணி ட்ரேட் செய்யவுள்ளதாகவும் ரசிகர்கள் தரப்பில் கிசுசிசுக்கள் கிளம்பியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியதாவது, ஒரு வீரரை ட்ரேட் செய்வது என்பது சென்னை அணியின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே அதனை நாங்கள் ஒருபோதும் செய்யமாட்டோம். அதேநேரத்தில் சென்னை அணியின் சார்பிலும் நாங்கள் மும்பை அணி வீரர்களை சென்னை அணிக்காக விளையாட விருப்பம் இருக்கின்றதா எனக் கேட்கவில்லை. மேலும் மும்பை அணியுடன் வர்த்தகம் செய்ய எங்களிடமும் வீரர்கள் இல்லை. மேலும் மும்பை அணி வீரர்களை ட்ரேட் செய்யவும் நாங்கள் விரும்பவில்லை” என துபாயில் நடைபெற்ற மினி ஏலத்திற்கு மத்தியில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.