கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஃபேர்வெல்


இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “மிகப்பெரிய எண்ணிக்கையில் அவர்கள்(ரசிகர்கள்) வந்துள்ளனர். அவர்கள் எனக்கு ஃபேர்வெல்(பிரியாவிடை) தர முயற்சிக்கின்றனர். அந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு மிக்க நன்றி. அவர்களது ஆதரவுக்கு மிக்க நன்றி கூறுகிறேன். அடுத்த முறை ஏராளமானோர் கொல்கத்தா ஜெர்சியில் வருவார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.




மேலும், டாஸ் போடுவதற்கு முன்பு “நான் இங்கே ஏராளமாக கிரிக்கெட் விளையாடி உள்ளேன். இங்கிருந்து 2 மணி நேரம் பயணித்தால் வரும் காரக்பூரில் நான் வேலை பார்த்தேன்” இவ்வாறு தோனி கூறினார்.


தற்போது 41 வயதாகும் தோனிக்கு இந்த ஐ.பி.எல். சீசனே கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறையே தோனி ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோனி சென்னை மண்ணில்தான் தன்னுடைய கடைசி போட்டியில் ஆடுவேன் என்று கூறியிருந்தார். இந்த சூழலில், இந்த தொடரில் சி.எஸ்.கே. அணி சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து ஆடி வருகிறது.


கடைசி கட்ட கிரிக்கெட்:


தோனியை காண்பதற்காகவே சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி மற்ற நகரங்களில் சி.எஸ்.கே. ஆடும் போட்டிகளிலும் மஞ்சள் நிற ஆடையுடன் தோனி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த போட்டிக்கு பிறகு பேசிய தோனி, ”கண்டிப்பாக எனக்கு வயதாகிவிட்டது. இது எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டம். அதனால், போட்டியில் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து ஆடுகிறேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




வழக்கமாக தோனி 6வது 7வது இடங்களில் களமிறங்கினாலும், போட்டியின் தன்மைக்கு ஏற்ப 4வது இடங்களில் எல்லாம் களமிறங்குவார். ஆனால், நடப்பு சீசனில் தோனி பெரும்பாலும் கடைசி ஓவர் அல்லது கடைசி ஓரிரு பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்ய களத்திற்கு வருகிறார். ஆனாலும், ஒவ்வொரு போட்டியிலும் தோனி பேட்டிங் செய்ய வேண்டுமென்று ரசிகர்கள் ஆர்வத்துடன் மைதானத்தில் ஆரவாரம் செய்கின்றனர்.


தோனி 241 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5039 ரன்களை விளாசியுள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 84 ரன்களை ஒரு போட்டியில் எடுத்துள்ளார்.


மேலும் படிக்க: KKR vs CSK, IPL 2023 Highlights: சரணடைந்த கொல்கத்தா.. 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி .. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!


மேலும் படிக்க: RCB vs RR, IPL 2023 Highlights: இம்பேக்ட் ப்ளேயரால் இடிந்து போன ராஜஸ்தான்; 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி.!