நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டதாக போலி அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஐபிஎல் 2023


16வது ஐபிஎல் சீசன்  கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. தொடர்ந்து நடந்த பிளே ஆஃப் போட்டிகளில் சென்னை, குஜராத் அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. கடந்த மே 28 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் முழுக்க மழை பெய்ததால் போட்டி அடுத்த நாள் ஒத்தி வைக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து மே 29 ஆம் தேதி இறுதிப்போட்டி தொடங்கியது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக தொடங்கிய நிலையில் முதலில் குஜராத் அணி பேட் செய்து 214 ரன்கள் எடுத்தது. சென்னை அணி இரண்டாவதாக பேட்டிங்கை தொடங்கிய நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் போட்டி தொடங்க தாமதமானது. அதன்பின்னர் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் ஆட்டத்தின் இறுதிபந்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. 


5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதனையடுத்து ஐபிஎல் கோப்பை சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சென்னை அணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 




சீமான் குறித்து போலி அறிக்கை 


இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டதாக அறிக்கை ஒன்று வெளியானது. அதில், “நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானுக்கும், சென்னை அணி வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் அணியின் கேப்டன், தோனி, நிர்வாகிகள் என யாரும் அவரை சந்தித்தது இல்லை. ஒருவேளை அவர் ஏதேனும் தொடர்புபடுத்தி சீமான் பேசினால் அது முழுக்க பொய் மற்றும் உண்மைக்கு புறம்பானது” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இணையத்தில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுதொடர்பாக சென்னை அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அதேபோல் அவர்களின் செய்திப் பிரிவில் இதுமாதிரியான செய்திகளும் இடம் பெறவில்லை. அதேசமயம் அந்த போலி அறிக்கையில் எழுத்துகள் வேறுபட்டும், வாக்கியம் தவறாகவும் இடம் பெற்றுள்ளது. இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் குவிந்து வருகிறது.