சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியுற்றிருந்தாலும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு வீரர்கள் சிறப்பு தருணத்தை தந்தனர்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 61வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிகொண்டது. இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடைசி ஹோம் மேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிக்கு முன்னதாக ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களுக்கு சென்னை நிர்வாகம் சார்பில் அன்பான வேண்டுகோள் விடப்பட்டது. அதில், போட்டி முடிந்த பிறகு உடனடியாக செல்ல வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ரசிகர்களாகிய உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டது. தொடர்ந்து டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்த சென்னை அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களுடன் தடுமாறியது.
அதன்பிறகு, ஷிவம் துபே மற்றும் ஜடேஜா ஓரளவு தாக்குபிடித்து ரன்களை குவித்தனர். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் டிசெண்டாக உயர்ந்தது. 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் 3 விக்கெட்களை இழந்தாலும், கேப்டன் ராணா மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி அரைசதத்தால் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டினர். தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் சக வீரர்கள் ஸ்டேடியம் முழுவதும் நடந்து வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது, திடீரென கமெண்ட்ரி பாக்ஸில் கமெண்ட்ரி செய்து கொண்டிருந்த கவாஸ்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை நோக்கி ஓடி வந்தார்.
நேராக ஓடிவந்தவர் தோனியிடம், எனது வெள்ளை சட்டையில் உங்களது ஆட்டோகிராப்பை போட முடியுமா? என கேட்டார். இதை பார்த்த தோனி சிரித்துகொண்டே கவாஸ்கரின் நெஞ்சு பகுதியில் தனது ஆட்டோகிராபை போட்டு, அதன்பிறகு கவாஸ்கரை இறுக்கமாக கட்டிப்பிடித்தார். உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான கவாஸ்கர். பல இளைஞர்களுக்கும் இன்னும் முன் உதாரணமாக இருக்கிறார். இவரே குழந்தைபோல் ஓடி வந்து தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து, கேப்டன் தோனி மற்றும் சக வீரர்கள் கூடியிருந்த ரசிகர்களுக்கு டி சர்ட் உள்ளிட்ட பொருட்களை வழங்கி தங்களது நன்றியினை வெளிப்படுத்தினர். நெகிழ்ச்சியான தருணத்திற்கு பிறகு பேசிய கவாஸ்கர், “ தோனியை யார்தான் நேசிக்கவில்லை. பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்த சாதனைகள் வியக்கத்தக்கவை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பல இளைஞர்களுக்கு முன்உதாரணமாக இருந்தார். பல இளைஞர்கள் அவரை மிகப்பெரிய இடத்தில் வைத்து பார்க்கிறார்கள். மிக்க நன்றி, நான் ஒரு பேனாவை கமெண்ட்ரி பாக்ஸில் கடன் வாங்கினேன். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஸ்டேடியத்தின் நடுவே செல்வதைக் கேள்விப்பட்டவுடன், அதை எடுத்து கொண்டு ஆட்டோகிராப் வாங்க ஓடினேன்” என்றார்.