ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய சாதனை படைத்தார். 


ஐபிஎல் போட்டி


ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில்  டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. 


தொடர்ந்து பேட் செய்த சென்னை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. சென்னை அணியின் வெற்றியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுஒருபுறமிருக்க சென்னை அணி கேப்டன் தோனி சத்தமே இல்லாமல் சாதனை ஒன்றை படைத்துள்ளார். 


தோனி சாதனை


அதாவது ஆட்டத்தின் 13 ஓவரை மகீஷ் தீக்‌ஷனா வீசினார். அவரது பந்துவீச்சை எதிர்கொண்ட ஹைதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் அபாரமான முறையில் தோனியால் கேட்ச் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இந்த கேட்ச்சின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார். தோனி இதுவரை 208 கேட்ச்  பிடித்துள்ள நிலையில், முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்கின் சாதனையை முறியடித்துள்ளார். 


இந்த பட்டியலில் 2வது இடத்தில் குயிண்டன் டி காக் 207 கேட்ச்களுடனும், தினேஷ் கார்த்திக் 205 கேட்ச்களுடனும் 3வது இடத்தில் உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் தோனியின் சாதனை முறியடிக்கப்பட வாய்ப்புள்ளது. 


மகேந்திர சிங் தோனி: 


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பிடிக்காதவர்கள் கூட, களத்தில் அவர் ஆட்டத்திறனையும், கணிப்பையும் பாராட்டும் அளவுக்கு திறமை வாய்ந்தவர். 41 வயதான எம்.எஸ். தோனி 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கு பின்னரே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தார். அதன்பின்னர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார். 


ஆனால் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி சென்னை அணியின் கேப்டனாக கலக்கி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடனும், 2 தோல்விகளுடனும் புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: MS Dhoni: "என் கிரிக்கெட் வாழ்வின் கடைசிக் கட்டம்” உருக்கமாக பேசிய தோனி..! ஓய்வு பெறுகிறாரா தல? சோகத்தில் ரசிகர்கள்..!