ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.


லக்னோ - குஜராத் அணிகள் மோதல்:


வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, ல்கனோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டுகளிக்கலாம்.


லக்னோ அணி நிலவரம்:


நடப்பு தொடரில் லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கேப்டன் கே.எல். ராகுல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாவிட்டாலும் கைல் மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரான் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.


அதோடு, நவின் உல்-ஹக், ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் பந்துவீச்சில் எதிரணிகளை மிரட்டி வருகின்றனர். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது லக்னோ அணிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.


குஜராத் அணி நிலவரம்:


நடப்பு சாம்பியனான குஜராத் அணி சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்றைய லீக் போட்டியில் களமிறங்குகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் சரியான கலவையில் அமைந்துள்ள ஒரு சில அணிகளில் குஜராத்தும் ஒன்று. சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்க, முகமது ஷமி, மோஹித் சர்மா மற்றும் ரஷித் கான் ஆகியோர் எதிரணியை திணறடிக்கின்றனர். அதேநேரம், கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியிடம் குஜராத் அணி தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மைதானம் எப்படி?


பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி மைதானத்தில் பந்து சற்றே நின்று வருவதால், ரன் குவிப்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக இருக்காது. சுழற்பந்துவீச்சாளர்கள் இன்றைய போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே பெரும்பாலும் விரும்பும்.


சிறந்த பேட்ஸ்மேன்: இன்றைய போட்டியில் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு


சிறந்த பந்துவீச்சாளர்: பந்துவீச்சில் ரஷித் கான் அதிகம் ஆதிக்க செலுத்த வாய்ப்பு


வெற்றி வாய்ப்பு யாருக்கு: முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்