ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 14 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 1) நடைபெற்று வருகிறது.
இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அசத்திய டிரெண்ட் போல்ட்:
இந்நிலையில் தான் ரோகித் சர்மா, நமன் திர், டெவால்ட் பிரெவிஸ் ஆகியோரை டிரெண்ட் போல்ட் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழக்கச் செய்து புதிய சாதனையை படைத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தியேலே விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார் போல்ட். சில போட்டிகளில் மட்டுமே முதல் பந்தில் விக்கெட் எடுக்கத்தவறி இருக்கிறார்.
அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு முதல் அவர் வீசிய முதல் ஓவரில் பவர்ப்ளேயில் மட்டும் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் இதுவரை 91 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 109 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். முக்கியமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் 15 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை எடுத்தார்.
மேலும், 2022 ஆம் ஆண்டு 16 போட்டிகள் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்து எதிரணி வீரர்களை மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமி இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் தான் வீசிய முதல் ஓவர்களில் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அதேபோல், புவனேஷ்வர் குமாரும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.