ஐ.பி.எல் சீசன் 17:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 13 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றன. 


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வென்று முதலிடத்திற்குச் செல்ல முனைப்பு காட்டுகிறது.


அதேநேரம், மும்பை அணியோ விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. எனவே, நடப்பாண்டில் உள்ளூர் மைதானத்தில் களமிறங்கும் முதல் போட்டியில் வென்று, புள்ளிக்கணக்கை தொடங்க மும்பை மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


 






ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 15 முறையும், ராஜஸ்தான் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.  மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 212 ரன்களையும், குறைந்தபட்சமாக 90 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 214 ரன்களையும், குறைந்தபட்சமாக 92 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதால் அதிரடியான ஆட்டத்தை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்):


இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர் ), ரோகித் சர்மா, நமன் திர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜஸ்பிரித் பும்ரா, குவேனா மபாகா


ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்):


யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்/ கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்