இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் உலகின் மிக முக்கியமான மற்றும் அதிகப்படியானவர்களால் கவனிக்கப்படும் லீக் தொடராகும். லீக் போட்டி அளவிலும் சரி சர்வதேச அளவிலான டி20 போட்டிகளிலும் சரி, போட்டியின் தன்மையை ஓரிரு பந்துகள் முற்றிலும் மாற்றி விடும். அப்படியான மாறுதல் என்பது, அதிரடியான பேட்டிங்கினாலும் மாறலாம், மிரட்டலான பந்து வீச்சினாலும் மாறலாம்.
கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் போட்டிகளை வெல்லவேண்டும் என்றால் அணியில் பேட்ஸ்மேன்கள் அதிகம் இருந்தால் போதும், ஆனால் தொடரை வெல்ல வேண்டும் என்றால் அணியில் பந்து வீச்சாளர்கள் அதிகம் தேவை. ஏனென்றால் பந்து வீச்சாளர்கள் அதிரடியாக ரன்கள் சேகரித்துக் கொண்டு இருக்கும் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவர். இதனால் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக பந்து வீசும் அணி மாறிவிடும்.
இப்படியான கிரிக்கெட்டில், ரன் குவிப்பில் ஈடுபடும் பேட்ஸ்மேன்களுக்கு சிக்ஸர்கள் விளாசுவதற்கு உடல் பலம் தேவை என்றால், பவுண்டரிகளை விளாசுவதற்கு சூழலைப் புரிந்து செயல்படும் திறமை அவசியம். ஏனென்றால் பேட்டியினை பந்து வீச்சாளர்களின் பிடியில் இருந்து தங்களது கட்டுக்குள் கொண்டு வர பவுண்டரிகள் மிகமிக அவசியம். உலகமே கவனிக்கும் இந்த ஐபிஎல் தொடரில் அதிகப்படியான பவுண்டரிகள் விளாசியது யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அதிக பவுண்டரிகள் விளாசியவர்கள்
- ஷிகர் தவான் - தற்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இவர் தனது பேட்டிங் திறமையால் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் சவாலாக இருப்பவர். இதுவரை 144 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள இவர், பவுண்டரிகள் மட்டும் 728. ஐபிஎல் வரலாற்றில் இவர்தான் அதிக பவுண்டரிகளை விளாசியவராக உள்ளார்.
- டேவிட் வார்னர் - ஐபிஎல் தொடரில் மிகவும் கவனிக்கப்படும் வெளிநாட்டு வீரர்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னரும் ஒருவர். இவரது சிறப்பான ஆட்டத்தினால் பல போட்டிகளை ஒற்றை நபராக வென்று கொடுத்துள்ளார். தற்போது டெல்லி அணியின் கேப்டனான இவர் இதுவரை 166 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிக பவுண்டரிகள் விளாசியவர்கள் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இவருக்கும் ஷிகர்தாவனுக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். இவர் 604 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
- மூன்றாவது இடத்தில் இருபவர் உலகிலேயே அதிக ஃபாலோவர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர். இவருக்கு ரன் மிஷின் என புனைப் பெயர் கூட உண்டு. பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி தனது அதிரடியான ஆட்டத்தால் பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல எதிரணியில் உள்ள 11 பேருக்கும் சவாலக இருக்ககூடியவர். இவரது ஸ்பெஷல் ஷாட் கவர் டிரைவ் என்றாலும் மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பவுண்டரிகளை விளாசும் திறமை கொண்டவர். இவர் இதுவரை 591 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.