ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தோனி விளையாடியதை, ஜியோ சினிமா செயலியில் ஒரே நேரத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் நேரலையில் கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆன்லைனில் ஒரு நேரத்தில் அதிகமான பார்வையாளர்களை பெற்ற போட்டியாக இந்த போட்டி உருவெடுத்துள்ளது.


ராஜஸ்தான் - சென்னை மோதல்:


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டது. 


அதிரடி காட்டிய தோனி:


19வது ஓவரில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாச அந்த ஓவரில் சென்னை அணி 20 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, கேப்டன் தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாச, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். போட்டியில் யார் வெற்றி பெறுவர் என ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது.


2.2 கோடி பார்வையாளர்கள்:


தோனி களத்தில் இருந்ததால் சென்னை அணி வெற்றி பெற்று விடும் என ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், அதையும் தாண்டி கோடிக்கணக்கானோர் தோனி கடைசி பந்தை எதிர்கொண்டதை ஆன்லைனில் பார்த்தனர். அதாவது, நேற்றைய போட்டியின் கடைசி பந்தை, ஜியோ சினிமா செயலி மூலமாக 2 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றிலேயே ஆன்லைனில் ஒரே நேரத்தில்  அதிக பார்வையாளர்களை பெற்ற போட்டியாக ராஜஸ்தான் மற்றும் சென்னை இடையேயான போட்டி உருவாகி உள்ளது.


மீண்டும் தோனி முதலிடம்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக தோனி விளையாடும் போது, ஒரு கோடியே 60 லட்சம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் ஜியோ சினிமா செயலி மூலம் போட்டியை கண்டுகளித்தனர். அதைதொடர்ந்து லக்னோ அணிக்கு எதிராக தோனி விளையாடியதை, ஒரே நேரத்தில் ஒரு கோடியே 70 லட்சம் பேர் பார்க்க, அவரது முந்தைய சாதனையை அவரே முறியடித்தார். பின்னர் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு கேப்டன் டூப்ளெசிஸ் அதிரடியாக விளையாடியதை ஒரே நேரத்தில் ஒரு கோடியே 80 லட்சம் பேர் கண்டு களித்தனர். இதுவே ஐபிஎல் தொடரில் பெரும் சாதனையாக இருந்தது. இந்நிலையில் தான், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தை தோனி எதிர்கொண்டதை ஒரே நேரத்தில் ஜியோ சினிமா செயலி மூலம் 2 கோடியே 20 லட்சம் பேர் கண்டுகளித்து புதிய வரலாறு படைத்துள்ளனர்.