சென்னை அணி கேப்டன் தோனிக்கு எதிராக எந்த திட்டமும் பலனளிக்காது என, ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். அதோடு, தோனி குறித்து பேசும்போது ஒருமுறை கூட அவர் பெயரை கூறாமல், தோனி மீது தான் கொண்டுள்ள மரியாதையை வெளிப்படுத்தினார்.
ராஜஸ்தான் - சென்னை மோதல்:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. ராஜஸ்தாண் அணி நிர்ணயித்த 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டது.
அதிரடி காட்டிய தோனி:
19வது ஓவரில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாச அந்த ஓவரில் சென்னை அணி 20 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, கேப்டன் தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாச, ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். போட்டியில் யார் வெற்றி பெறுவர் என ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், சந்தீப் ஷர்மாவின் அபார பந்துவீச்சால் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனியை புகழ்ந்த சாம்சன்:
வெற்றிக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் கேப்டன் சாம்சன், தோனி பற்றி கருத்து தெரிவித்தார். அப்போது, கடைசி இரண்டு ஓவர்கள் மீதமிருந்தபோது, எளிதில் வெற்றி பெற்றுவிடுவோம் என நினைத்தீர்களா என சாம்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒருமுறை கூட இல்லை. அந்த நபர் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது அப்படி நினைக்கவே முடியாது. நாம் அவரை மதிக்க வேண்டாம், அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அறிவோம். கடைசி பந்து வரை போட்டி முடிவடையாது. பல திட்டமிடல்களை மேற்கொண்டேன், ஆய்வு செய்தேன், டேடா குழுவுடன் அமர்ந்தும் ஆலோசித்தேன். ஆனால், எந்த நேரத்தில் யார் நன்றாக பந்துவீசுகிகிறார் என்பது போன்ற பல முக்கிய முடிவுகளை மைதானத்திற்குள் எடுக்க வேண்டும். நான் இரண்டு பந்துகள் தான் விளையாடினேன் ஆனால் சதம் அடித்ததை போன்று நான் சோர்வடைந்து விட்டேன்” என்றார்.
”தோனியிடம் எதுவுமே வேலை செய்யாது”
தொடர்ந்து தோனியை தடுத்து நிறுத்துவதற்காக எதேனும் திட்டம் அல்லது தரவுகளை வைத்து இருந்தீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சாம்சன், அவரை நிறுத்துவதற்கு நீங்கள் சொன்னது போல என்ன தரவுகள் உள்ளன கூறுங்கள். எதுவுமே, எந்த தரவுகளுமே அவருக்கு எதிராக எடுபடாது என்றார். இந்த முழு நீள பதிலில் எங்குமே தோனியின் பெயரை சஞ்சு சாம்சன் ஒருமுறை கூட குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது, தோனியை எந்த அளவிற்கு அவர் மதிக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது என, ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.