ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. 


மும்பை - ஐதராபாத் அணிகள் மோதல்:


ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.


நடப்பு தொடரில் இதுவரை:


நடப்பு தொடரில் இதுவரை மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளின் செயல்பாடும் ஒரே விதமாக தான் உள்ளன. முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்த அணிகள், அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முறையே, 8 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன. இன்றைய போட்டியின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில், 5வது இடத்திற்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.


மைதானம் எப்படி?


ராஜிவ் காந்தி மைதானமானது பேட்டிங்கிற்கு சாதகம் என்பதால், இது ஒரு ஹை-ஸ்கோரிங் போட்டியாக அமைய வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் நடப்பு தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே நடந்துள்ள நிலையில், ஒன்றில் ராஜஸ்தான் அணி 200+ ரன்களை குவிக்க, மற்றொன்றில் 144 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் அணி அளிதில் எட்டியது. இதனால், இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும். 


அணிகளின் நிலவரம்:


பேட்டிங்கிற்கு சாதகமான இந்த போட்டியில் கோலோச்ச மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் கிரீன் மற்றும் திலக் வர்மா என ஒரு பெரும் பேட்டிங் பட்டாளமே உள்ளது. அதேநேரம் ஐதராபாத் அணியிலும் ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், திரிபாதி மற்றும் மார்க்ரம் போன்ற தரமான வீரர்கள் உள்ளனர்.


சிறந்த பேட்ஸ்மேன்: இன்றைய போட்டியில் ஹாரி ப்ரூக் சிறந்த பேட்ஸ்-மேன் ஆக கவனம் ஈர்க்க வாய்ப்பு உள்ளது.


சிறந்த பந்துவீச்சாளர்: இன்றைய போட்டியில் மயங்க் மார்கண்டே சிறந்த பந்துவீச்சாளராக ஆக கவனம் ஈர்க்க வாய்ப்பு உள்ளது.


மும்பை உத்தேச அணி:


இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்


ஐதராபாத் உத்தேச அணி:


ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்