ஐ.பி.எல் சீசன் 17:
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் 14 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினார்கள்.
கோல்டன் டக் அவுட் ஆனா வீரர்கள்:
இதில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் டிரெண்ட் போல்ட் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி நடையைக்கட்டினார். அடுத்ததாக களம் இறங்கிய நமன் திர் மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோரும் கோல்டன் டக் அவுட் ஆகி மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
பின்னர் திலக் வர்மா களம் இறங்கினார். இதனிடையே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கின் இஷான் கிஷன் விக்கெட்டை பறிகொடுத்தார். 14 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 16 ரன்கள் எடுத்தார்.
126 ரன்கள் இலக்கு:
அடுத்ததாக களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓரளவிற்கு ரன்களை சேர்த்துக்கொடுத்தார். ஹர்திக் பாண்டியாவும் திலக்வர்மாவும் ஜோடி சேர்ந்தனர். அந்தவகையில் 21 பந்துகள் களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரிகள் விளாசி 34 ரன்கள் குவித்தார். அதேபோல் திலக் வர்மா 29 பந்துகள் களத்தில் நின்று 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 32 ரன்களை எடுத்தார்.
பின்னர் வந்த டேவிட் 24 பந்துகள் களத்தில் நின்று 17 ரன்கள் எடுத்தார். ஜெரால்ட் கோட்ஸி 4 ரன்களும், ஜஸ்பிரித் பும்ரா 8 ரன்களும், ஆகாஷ் மத்வால் 4 ரன்களும் எடுக்க மொத்தம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.