ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். அதன்படி, முதல் ஆறு ஓவர்களிலேயே அதிகபட்சமாக இரண்டு அணிகள் நூறு ரன்களை எட்டியுள்ளன.

ராஜஸ்தான் அதிரடி:

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய, பட்லர் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். குறிப்பாக பட்லர் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட முதல் 20 பந்துகளிலேயே  அரைசதம் கடந்தார்.

22 பந்துகளில் 54 ரன்களை எடுத்து பட்லர் ஆட்டமிழக்க, பவர்பிளே முடிவில் ஜெய்ஷ்வால் 13 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். இதனால், முதல் 6 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களை சேர்த்தது. இதன் மூலம், பவர்பிளே முடிவில் அதிக ரன்களை எடுத்த பட்டியலில், ஆறாவது இடத்தை ராஜஸ்தான் அணி பிடித்துள்ளது.

பவர்பிளேயில் அசத்திய அணிகள்:

பவர்பிளே முடிவில் அதிக ரன்களை எடுத்த அணிகளின் பட்டியலில், கொல்கத்தா அணி முதலிடம் பிடித்துள்ளது. 2017ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதல் 6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 105 ரன்களை எடுத்தது. அந்த போட்டியில் 159 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக, பவர்பிளே முடிவில் சென்னை அணி 100 ரன்களை எட்டியது. 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை சேர்த்தது.

 

ரன் விவரம்     அணி எதிரணி வருடம்
105 - 0 கொல்கத்தா பெங்களூரு 2017
100 - 2 சென்னை பஞ்சாப் 2014
90 - 0 சென்னை மும்பை 2015
87 - 2 கொச்சி ராஜஸ்தான் 2011
86 - 1 பஞ்சாப்  ஐதராபாத் 2014
85 - 1 ராஜஸ்தான் ஐதராபாத் 2023

பவர்-பிளேயில் ராஜஸ்தான் எடுத்த அதிக ரன்கள்:

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் அறிமுகமானதிலிருந்து விளையாடி வரும் ராஜஸ்தான் அணி, முதல் சீசனிலேயே கோப்பையையும் கைப்பற்றியது. ஐதராபாத் அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் எடுத்த ரன்கள் தான், பவர் பிளேயில் அந்த அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக பவர்பிளேயில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களையும், 2010ம் ஆண்டு  பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்களையும் எடுத்து இருந்தது. அதற்கும் முன்னதாக, கடந்த 2008ம் ஆண்டு டெக்கான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கும் 73 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.